சென்னை: விஜயின் அரசியலை தவிர்க்க முடியாத ஒரு அரசியலாக தான் பார்ப்பதாகவும், அரசியலில் அவர் திமுகவை எதிர்ப்பது தான் சரியான விஷயம் என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும் தானும் ஒரு நாள் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், தன் அரசியல் யாரையும் சார்ந்து இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா காலத்தின் போது புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட்டன, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து திரைத்துறையை சார்ந்த பலர் வலியுறுத்தி வந்த நிலையில், புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புகளுக்கான கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்த முதலமைச்சர் ரங்கசாமியை நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார்,
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், புதுச்சேரியில் பிடிப்பு கட்டணத்தை குறைத்த முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த கட்டணம் இன்னமும் குறைக்கப்பட்டால் புதுச்சேரியில் சுற்றுலா மேம்படும், நிறைய படப்பிடிப்பு நடைபெறும், உலகில் மிக அழகான கடற்கரை நகரங்களில் புதுச்சேரியும் ஒன்று என தெரிவித்தார்.
தொடர்ந்து நயன்தாரா - தனுஷ் விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பார்த்திபன், ”நயன்தாரா தனுஷ் இடையிலான கருத்து வேறுபாடு சுவராஸ்யமாக இருக்கிறது. ஒரு பக்கம் தனுஷ் ஒரு பக்கம் நயன்தாரா. இதில் திருமணம் ஒன்றிற்கு வந்த அவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்திருந்தது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நாம் பார்வையாளர்கள். அதனால், இரு தரப்பையும் நான் ரசிக்கிறேன்” எனக் கூறினார்,
» பத்து நிமிட தாமதத்தில் நான்கு ட்யூன்: இளையராஜா பற்றி வெற்றிமாறன் பேச்சு!
» ’விடுதலை2’: சூரி படத்தில் எனக்கு வாய்ப்பு; விஜய்சேதுபதி பேச்சு!
தொடர்ந்து திரைத்துறையில் சமீப காலங்களாக விவாகரத்து அதிகரித்து வருகிறது என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், ”இந்த வருடம் விவாகரத்து வருடம் போல, அதனால் தான் நிறைய விவாகரத்து செய்திகள் வந்துள்ளது. நான் ரஹ்மான் சாருடன் கிட்டத்தட்ட 22 ஆண்டு காலங்களாக பழகியுள்ளேன். அவர் மிகவும் தூய்மையானவர். அவரை போல ஒரு சிறந்த மனிதர் உலகிலேயே கிடைக்க மாட்டார். அதனால்தான் விவாகரத்து அறிவித்த அவரது மனைவியே அவரைப் பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம்” என கூறியுள்ளார்.
தொடர்ந்து நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், ”விஜயின் அரசியலை தவிர்க்க முடியாத ஒரு அரசியலாக நான் பார்க்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வரும்போது கூட இவர்கள் வந்து என்ன செய்து விடுவார்கள் என விமர்சனங்கள் இருந்தது. அதுபோல விமர்சனங்கள் தான் தற்போது விஜய்க்கும் உள்ளது. ஆனால், அவருடைய எழுச்சி என்பது மிகவும் பிரமாதமாக உள்ளது. அவர் அடுத்த அடுத்த நல்ல முன்னேற்றங்களை அடைவார். விஜய் திமுகவை எதிர்ப்பது தான் சரியான விஷயம், அரசியல் என்றால் இன்று யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களை எதிர்ப்பது தான் கடந்த காலங்களில் இருந்தவர்கள் செய்தார்கள். எம்ஜிஆரும் அதைத்தான் செய்துள்ளார்” எனக் கூறிய அவர்,
”எனக்கும் அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளது. நானும் ஒரு நாள் கட்சி ஆரம்பிப்பேன். என் அரசியல் யாரையும் சார்ந்து இருக்காது. ‘புதிய பாதை’ தொடங்கி என்னுடைய அனைத்து படங்களிலும் அரசியல் உள்ளது. எனக்கும் அரசியல் விருப்பம் உள்ளது. ஆனால், அது இப்போது இல்லை” என கூறினார்.