பத்து நிமிட தாமதத்தில் நான்கு ட்யூன்: இளையராஜா பற்றி வெற்றிமாறன் பேச்சு!

By KU BUREAU

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை2’ படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, கென் கருணாஸ் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு படம் எடுப்பதற்கு நிறைய உழைப்பு தேவை. ஒருவர் நம்பும் விஷயத்தை மற்றவர்களும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம். டிசம்பர், 2020 தான் படத்தை ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை காலம் இந்த கதையை புரிந்து கொண்டு முழு நம்பிக்கையில் பயணித்த குழுவினருக்கு மிக்க நன்றி. படத்தில் என்னுடைய அசிஸ்டெண்ட் அனைவரும் கோ-கிரியேட்டர்ஸாக உழைத்திருக்கின்றனர். இதுபோன்ற டீம் கிடைத்தது என் பாக்கியம்.

இதில் ராஜா சார் உள்ளே வந்தது எனக்கு அதிர்ஷ்டம். அவர் ரொம்பவே பன்ச்சுவல். நான் பத்து நிமிடம் தாமதமாக அவரைப் பார்க்க சென்றால் கூட அதற்குள் நான்கு ட்யூன் போட்டு வைத்திருப்பார். அவர் எனக்கு பர்சனலாகவும் நிறைய இடம் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் எனக்கு பெருமையான விஷயம். படத்தில் இயக்குநரின் வேலை என்ன அதற்கு தன்னுடைய சிறந்த பங்களிப்பு என்ன தர முடியும் என்பதில் அவர் தெளிவாக இருப்பார்.

அவரின் ஜீனியஸ் மைண்டை அருகில் இருந்து பார்த்தது மகிழ்ச்சி. படத்தில் நான்கு பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எட்டு நாள் தான் கால்ஷீட் என சேதுவை இந்தப் படத்திற்கு கூப்பிட்டேன். ஆனால் இரண்டு பாகமும் சேர்த்து 257 நாட்கள் ஆகிவிட்டது. இதில் சேது குறைந்தது 120 நாட்கள் நடித்திருப்பார். அந்த பொறுமைக்கு நன்றி.

சூரியும் நிறைய நாட்கள் நடித்திருக்கிறார். இந்தப் படம் மூலம் எல்லோரும் நிறைய கற்றிருக்கிறோம். படத்தில் மஞ்சு வாரியரையும் 3 நாட்கள் கால்ஷீட் என்றுதான் கூப்பிட்டேன். ஆனால் இப்போது அவருக்கு படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. முக்கியமான கதாபாத்திரம் அவருடையது. என்னுடைய குடும்பம், நண்பர்கள், டீம் எல்லோருக்கும் நன்றி" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE