கோவாவில் நடந்து வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் நடிகை சுஹாசினி மணிரத்னம் பேசும்போது கூறியதாவது:
மற்ற துறைகளை விட சினிமாவில் வித்தியாசம் இருக்கிறது. அங்கு வேலை முடிந்ததும் உங்கள் வீட்டுக்குத் திரும்பி விடலாம். சினிமா அப்படியில்லை. 200 முதல் 300 பேர் கொண்ட குழு, ஓர் இடத்துக்குச் சென்று குடும்பமாக வாழ வேண்டும். அப்போது விரும்பியோ விரும்பாமலோ எல்லைகள் மீறப்படுகின்றன. படப்பிடிப்பில் இது போன்று நடந்தால் என்ன செய்வீர்கள்? என்று என் கணவர் மணிரத்னத்திடம் கேட்டேன். ‘படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேற்றி விடுவேன். ஏற்கெனவே அப்படிச் செய்திருக்கிறேன்’ என்றார். 200 பேர் கொண்ட ஒரு குழுவில் குடும்பத்தை விட்டு தனியாக இருப்பவர்களிடம் சிலர் எல்லை மீறுகிறார்கள்.
மலையாள சினிமாவில் அப்படித்தான் நடக்கிறது. அங்கு பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவு. பெரும்பாலான தமிழ்ப் படங்கள் சென்னையிலும் கன்னடப் படங்கள் பெங்களூருவிலும் தெலுங்கு படங்கள் ஹைதராபாத்திலும் படமாக்கப்படுகின்றன. ஆனால் மலையாள படங்கள் வெவ்வேறு லொகேஷனில் எடுக்கப்படுகின்றன. அதனால் எல்லை மீறல் நடக்கிறது. இவ்வாறு சுஹாசினி தெரிவித்துள்ளார்.