சென்னை: ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டியிருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி ‘அமரன்’ படம் திரையரங்குகளில் வெளியானது. மேஜர் முகுந்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தக் கதையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். படமும், நடிகர்களின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றாலும் சில சர்ச்சைகளும் இந்தக் கதையை சுற்றி வலம் வந்தன.
படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. படத்தின் பிரம்மாண்டமான வெற்றி விழாவை விரைவில் தயாரிப்பாளர் கமல்ஹாசன் நடத்த இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் ‘அமரன்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார். விஜயுடன் 12 வருடங்களுக்கு முன்பு எடுத்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ’லவ் யூ விஜய் சார்! நன்றி, நான் உங்களுக்காக தினமும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். ’அமரன்’ படத்தைப் பாராட்டியதற்கு நன்றி. 12 வருஷம் 2 மாசம் 1 நாள் 15 மணி நேரம் நாம் அடுத்த படம் எடுப்பதற்கு ஆகியிருக்கிறது’ என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.