மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு நான் அரசியலுக்கு வந்திருந்தால் எல்லாவற்றையும் இழந்திருக்க வேண்டியதுதான் என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஜானகி அம்மாள் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ‘வீடியோ' மூலம் பேசிய வாழ்த்து செய்தி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் பேசிய ரஜினிகாந்த், “ஜானகி அம்மாளிடம் எம்.ஜி.ஆர்., ‘ரஜினிகாந்த் திரைப்படங்களில் நிறைய சிகரெட்' குடிக்கிறார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை இளைஞர்கள் பின் தொடர்கிறார்கள். இதை பார்த்து அவர்களும் இந்த பழக்கத்துக்கு ஆளாகி விடுகிறார்கள். எனவே அவர் சினிமாவில் இதை செய்யக்கூடாது. நான் சரியான நேரத்தில் ரஜினிகாந்திடம் சொல்கிறேன்' என்று சொன்னதை என்னிடம் தெரிவித்தார். இது என்னால் மறக்க முடியாது.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜானகி அம்மாள் அரசியலுக்கு வந்தது விபத்து. அவருக்கு கொஞ்சம் கூட அரசியலில் ஈடுபாடு, இஷ்டம் கிடையாது. பிறர் வற்புறுத்தியதால் சூழ்நிலை கைதியாக அரசியலுக்கு வந்து முதல்-அமைச்சர் ஆனார். பின்னர், தேர்தல் வந்தபோது 2 அணியாக பிரிந்து, அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரமான 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டு, வேறோரு சின்னத்தில் நின்று படுதோல்வியை சந்தித்தார்.
‘நான் 2017ல் அரசியலுக்கு வருவேன்' என்று சொன்னேன். அப்போது நிறைய பேர் என்னை சந்தித்து ஆலோசனை சொல்ல வந்தார்கள். அந்த ஆலோசனைகளைக் கேட்டிருந்தால் அவ்வளவுதான். எல்லாவற்றையும் இழந்து, நிம்மதியையும் இழந்து சென்று விட வேண்டியதுதான்.
» வாரத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி: தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
» மதுராந்தகம் | அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கீழ்மருவத்தூரில் பெண்கள் முற்றுகை போராட்டம்
ஏதாவது ஒரு முடிவை எடுக்கும் போது அதனால் உனக்கு மட்டும் சந்தோஷம், திருப்தி என்றால் அந்த முடிவை எடுக்க கூடாது. மற்றவர்களுக்கும் சந்தோஷம், திருப்தி என்றால் அந்த முடிவை எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த மாதிரி ஜானகி அம்மாள் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அவரே முடிவு எடுத்து ஜெயலலிதாவை அழைத்து இந்த அரசியல் எனக்கு சரிபட்டு வராது. அதற்கு நீங்கள் தான் சரி. உங்களிடம் திறமை, தைரியம், பக்குவம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை இன்னும் முன்னுக்கு கொண்டு வருவதற்கு உங்களால் தான் முடியும். அது என்னால் முடியாது. எங்கே கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டு கையெழுத்து போட்டார்.
‘இரட்டை இலை' சின்னத்தை மீட்டு ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து, அரசியலில் இருந்து ஒதுங்கி கொண்டார். இது எவ்வளவு பெரிய குணம். அவருக்கு விமரிசையாக நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி உட்பட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.