சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கில் நேற்று இருவரும் ஆஜராகி, விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். வழக்கின் தீர்ப்பு நவ.27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு நவ.18-ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் நேரில் ஆஜராகினர்.
தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் கவுதம் எஸ்.ராமன், ஐஸ்வர்யா தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆகியோர் ஆஜராகியிருந்தனர். பின்னர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் வழக்கு தொடர்பாக தனியாகப் பேசி முடிவெடுக்க நீதிபதி அறிவுறுத்தினார். சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், தாங்கள் பிரிந்து வாழவே விரும்புவதாக இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மேலும், இதுதொடர்பாக, நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பதிவேட்டில் கையொப்பம் இட்டனர். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் நவ.27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்து வழக்கை தள்ளிவைத்தார். முன்னதாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பத்திரிக்கையாளர் உள்ளிட்டோர் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. கதவுகள் மூடப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது.
» அரசுப் பள்ளி ஆசிரியர் படுகொலை தமிழகம் முழுவதும் டிட்டோஜேக் போராட்டம்
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ நவ.20, 2024