டாக்குமெண்ட்ரி பார்த்து நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்: ஒளிப்பதிவாளர் சரண்யா பேட்டி

By KU BUREAU

சென்னை: சினிமாவில் திரைக்கு வரும் பெண்களைவிட திரைக்குப் பின்னால் இயங்கும் பெண்கள் எண்ணிக்கை இன்றளவு குறைவு. குறிப்பாக, ஒளிப்பதிவாளர் துறை சவாலானது. தமிழ் திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக இயங்கும் பெண்களில் மிகச்சிலரில் சரண்யாவும் ஒருவர். சமீபத்தில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்’ டாக்குமெண்ட்ரிக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இதுமட்டுமல்லாது, ‘2.0’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்டப் படங்களில் அசிஸ்டெண்ட் சினிமோட்டோகிராஃபராகவும் பணியாற்றி இருக்கிறார். அவரிடம் ‘இந்து தமிழ் திசை’ யூடியூப் தளத்திற்காகப் பேசினோம்.

“பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, பத்திரிகை ஒன்றிற்கு நான் எழுதி அனுப்பிய கட்டுரை ஒன்றிற்கு கிடைத்த பரிசுதான் கேமரா. அதில் இருந்துதான் எனக்கு கேமரா ஆர்வம் வந்தது. கல்லூரியில் அதுதொடர்பான படிப்பே படித்தேன். பின்பு சினிமாவில் நீரவ்ஷா சாரின் உதவியாளராக சேர்ந்தேன். ‘2.0’ படம்தான் எனக்கும் முதல் படம். பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்கள் என அந்த செட்டே எனக்குப் புதிது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.

அதன் பின்பு, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘சீதா ராமம்’ உள்ளிட்டப் படங்களிலும் அசிஸ்டெண்ட்டாக பணிபுரிந்தேன். பின்பு, சில மலையாளப் படங்களில் தனியாக கையாண்டேன். பெண்களுக்கு ஒளிப்பதிவு துறை கடினம் என சொல்வார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை ஒரு உயிருக்கே தாயாக பிறப்பு கொடுக்கிறோம். அப்படி இருக்கும்போது கேமரா கையாள்வது எளிதுதான். அதனால், உங்களுக்கு பிடித்த துறை இது என்றால் நிச்சயம் சினிமாவுக்கு வரலாம்.

நயன்தாரா ரொம்பவே கேமரா ஃபிரெண்ட்லி. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனியாக சினிமாவுக்குள் வந்து எப்படி லேடி சூப்பர் ஸ்டாராக ஆனார் என்பதுதான் இந்த டாக்குமெண்ட்ரியில் பார்க்கலாம். பிரபலங்களை இண்டர்வியூ செய்த போர்ஷன் மட்டுமே நான் கையாண்டேன். நயன்தாராவுக்கும் மகிழ்ச்சியான அனுபவமாக இது இருந்தது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE