தல, தளபதியின் இசை ‘பாட்ஷா’ தேவாவின் ‘விடாமுயற்சி’ கதை | பிறந்தநாள் ஸ்பெஷல்

By குமார் துரைக்கண்ணு

1991-ல் தளபதி, குணா, ஈரமான ரோஜாவே, கோபுர வாசலிலே, கும்பக்கரை தங்கைய்யா, என் ராசாவின் மனசிலே, இதயம், சின்ன தம்பி, கேப்டன் பிரபாகரன் உள்பட தமிழ், தெலுங்கு என அந்த ஆண்டில் மட்டும் 39 படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இதில் ரஜினி நடித்த ‘தளபதி’ மிகப் பெரிய ஹிட். இந்த நிலையில், பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தங்கள் தயாரிப்பில் 3 புதிய படங்களுக்கான அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.

வானமே எல்லை, அண்ணாமலை மற்றும் ரோஜா... இந்த மூன்று படங்களுக்கும் இளையராஜா இசையில்லை. ரோஜா படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை திரையுலகில் கவிதாலாயா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. அதேபோல், ரஜினியின் அண்ணாமலை படத்துக்கு தேவா இசையமைப்பதாக அறிவிப்பு வெளியாகிறது. வானமே எல்லை படத்துக்கு மரகதமணி இசை. இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

அதுவும் தளபதி போன்ற மிகப் பெரிய வெற்றி படத்துக்குப் பிறகு, இளையராஜா இசை இல்லாமல் ரஜினி நடிக்கப்போகும் புதிய படத்தின் அறிவிப்பு, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தலர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. அப்போதுதான் அண்ணாமலை படத்தின் இசையமைப்பாளரான தேவாவின் மீது, ஒட்டுமொத்த கவனமும் திரும்புகிறது. அந்த நேரத்தில் அவர் கிட்டத்தட்ட 30-படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்டார். அதிலும் வைகாசி பொறந்தாச்சு படத்தின் பாடல்கள் அனைவரையும் வெகுவாக ஈர்த்திருந்தது.

அதுபோல், ஆத்தா உன் கோயிலிலே, வசந்தகாலப் பறவை, தெற்கு தெரு மச்சான் ஆகிய படங்களின் பாடல்களும் அவருக்கான அடையாளங்களாக அமைந்திருந்தன. தேவாவின் பெயர் சொல்லும் இசைக்கு அந்த அடையாளங்கள் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை.

இந்தச் சூழலில் அவருக்கு கிடைத்த அண்ணாமலை படத்தை தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை இறுகப் பற்றிக் கொள்கிறார் தேவா. வந்தேன்டா பால்காரன், அண்ணாமலை அண்ணாமலை, கொண்டையில் தாழம்பூ, றெக்க கட்டிப் பறக்குதடி, ஒரு வெண்புறா, வெற்றி நிச்சயம் என அந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் ஹிட்டாக்கி, அந்தப் படத்தின் இடைவேளை காட்சியில், ஹோட்டல் அதிபர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று, அந்த நாற்காலியில் ரஜினிகாந்த் அமர்வது போல, தமிழ் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார் தேவா.

ஆம், தளபதிக்கு பிறகு வந்த அப்படத்தின் பின்னணி இசையிலும் தேவா மிரட்டியிருப்பார். மின்னல் வேக ரஜினிக்கு தனது பின்னணி இசை மூலம் மின்சாரம் பாய்ச்சியிருப்பார் தேவா. வந்தேன்டா பால்காரன் படத்தின் துவக்கத்தில் வரும் அந்த ஓப்பனிங் ரிதம், ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அந்தப் பாடலைக் கேட்கும் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும்.

அதுவரை, ரஜினி திரையில் தோன்றும் அறிமுக காட்சிகள் தான் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் தந்து கொண்டிருந்தது. ஆனால், அவரது பெயர் திரையில் வரும்போதே, திரையை தீப்பிடிக்கச் செய்தவர் தேவாதான். அண்ணாமலையில் இருந்துதான் ரஜினிகாந்தின் பெயர் திரையில் வரும்போது ஓர் பிரத்யேகமான இசை வடிவமைக்கப்பட்டது. இன்றளவும் அதுதான் திரையில் பயன்படுத்தப்படுகிறது. FDFS கலாச்சாரத்துக்கு முன்பே பெரும் ரசிக கூட்டங்களை வைப் மோடில் வைத்திருந்தவர் தேனிசைத் தென்றல் தேவா.

தேவநேசன் சொக்கலிங்கம் என்றழைக்கப்படும் தேவாவுக்கு சொந்த ஊர் சென்னை தான். சிறு வயது முதலே, இசையின் மீது ஆர்வம் கொண்டவர் கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசைகளை கற்றுக்கொள்கிறார். ஆரம்ப காலங்களில், தனது நண்பர் சந்திரபோஸ் உடன் இணைந்து தூர்தர்ஷனிலும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார். நூற்றுக்கணக்கான பக்தி பாடல்களுக்கு இசையமைத்தார். இருப்பினும், தேவாவின் மீதான புகழ் வெளிச்சம் படர அவர் 1992 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

அண்ணாமலைக்குப் பிறகு தேவா தொடர்ந்து இசையமைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும், அவருக்கு பெரிய அளவிலான வெற்றிப் படங்கள் அமையாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டே வந்தார். அந்த வகையில், சூரியன், வேடன், செந்தூரப்பாண்டி, இந்து, அரண்மனைக் காவலன், என் ஆசை மச்சான், தாய் மாமன் போன்ற படங்கள்தான் அடுத்த 3 ஆண்டுகளில் அவரது பெயர் சொல்லும் வகையிலான படங்களாக அமைகிறது.

இருப்பினும், தனது பிளாக்பஸ்டர் வெற்றியை தேடிய ஓட்டத்தில் தேவாவின் தீவிரமான பாய்ச்சல் தொடர்கிறது. அந்த தேடல் 1995-ல் தேவாவுக்கு வசமாகிறது. பாலச்சந்தரின் சிஷ்யர்களில் ஒருவரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாட்ஷா வெளியாகிறது. அந்தப் படத்துக்கு தேவாதான் இசை. படம் மிகப் பெரிய வெற்றி அடைவதோடு, படத்தின் பாடல்கள் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, படத்தின் பின்னணி இசை தேவாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது.

பிளாஷ்பேக் காட்சிகளில் ரஜினி நடந்துவரும் காட்சிகளுக்கான தேவாவின் பின்னணி இசைதான், ரஜினியை நிஜமான பாட்ஷாவாக மாற்றியது. இப்படத்தில் வந்த ஆட்டோக்காரன் பாடல் இல்லாமல் ஆயுத பூஜை முழுமை பெறுவது இல்லை. பாட்ஷா பாரு, ஸ்டைலு ஸ்டைலுதான், தங்கமகன் இன்று, நீ நடந்தால் நடையழகு என்று இந்தப்படத்தில் வந்த அத்தனை பாடல்களும் ஹிட்டடித்தன. நடிகர் ரஜினிகாந்த் தேவா குறித்து பேசும் போதெல்லாம் பாட்ஷா படம் குறித்து பேசாமல் இருப்பதில்லை. அந்தளவுக்கு, இப்படத்தின் வெற்றியில் தேவா கலந்திருந்தார்.

அதே வருடம், பாலச்சந்தரின் மற்றொரு துணை இயக்குநரான வஸந்த் இயக்கத்தில் ஆசை திரைப்படம் வெளியானது. அந்தப் படத்துக்கு தேனிசைத் தென்றல் தேவாதான் இசை. ஆசை திரைப்படம், தேவாவின் இசைப் பயணத்தில் ஒரு மைல்கல். காரணம், அதுவரை தேவாவின் இசையில் வந்த படங்களுக்கும், ஆசைக்குப் பிறகு இசை மெருகேறியிருப்பதை உணர முடியும். கொஞ்ச நாள் பொறு தலைவா, மீனம்மா, புல்வெளி புல்வெளி, திலோத்தம்மா பாடல்கள் என அந்தப் படம் மிகப் பெரிய மியூசிக்கல் ஹிட்டானது. இந்தப் படம் தேவாவுக்கு தமிழக அரசு விருதினை கொண்டு வந்து சேர்த்தது. இப்படித்தான் தேவாவின் இசைப் பயணம் தொடங்கியது.

இயக்குநர் வஸந்த் உடன் தேவா மீண்டும் இணைந்து சம்பவம் செய்த படம் நேருக்கு நேர். அந்தப் படத்தில் வந்த பாடல்களும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவை. அவள் வருவாளா, மனம் விரும்புதே, எங்கெங்கே எங்கெங்கே என தேவாவின் இசையில் முத்து முத்தான பாடல்களைப் பெற்ற இயக்குநர் வஸந்த் தான் தேவாவின் இசையை வேறொரு தளத்துக் கொண்டு சென்றதில் மிக முக்கியமானவர். இதை தேவாவும் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

ரஜினி, கமலின் திரைப்படங்களுக்கு தேவா இசை அமைத்திருந்தாலும், அவரது இசையை வெகுவாக பயன்படுத்திக் கொண்டவர்கள் தல தளபதி தான். இந்த இருவரது படங்களுக்கும் தொடக்க காலங்களில் தொடர்ந்து இசையமைத்தவர் தேவாதான். குறிப்பாக விஜய் ஆரம்ப காலத்தில் வெள்ளித் திரையில் ஆட்டம் போட்டதெல்லாம் தேவாவின் இசையில் வெளிவந்த பாடல்களுக்குத்தான். செந்தூரப்பாண்டி, தேவா, விஷ்னு, ரசிகன், காலமெல்லாம் காத்திருப்பேன், ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், மின்சார கண்ணா, குஷி, பகவதி என அந்தப் பட்டியல் நீள்கிறது.

அதேபோல், அஜித்தின் தொடக்கமும் தேவாதான். ஆசை, வான்மதி, காதல் கோட்டை, நேசம், ரெட்டை ஜடை வயசு, உன்னைத்தேடி, வாலி, முகவரி, சிட்டிசன், ஆனந்தப் பூங்காற்றே, ரெட் உள்ளிட்ட படங்களுக்கு தேவாதான் இசை.

அண்ணன் தம்பிகள் என ஓர் குடும்பமாக இந்த இசைத் துறையில், ஆரம்பகாலத்தில் இருந்தே மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்தவர் தேவா. அவருக்கு ஏனோ, தொடர் வெற்றி என்பது மட்டும் அமையாமல் போய்விட்டது. 1986-ல் மாட்டுக்கார மன்னாரு என்ற படத்துக்குத் தான் தேவா முதன்முதலாக இசையமைக்கிறார். ஆனால், அந்தப் படம் குறித்த வேறந்த தகவலும் கிடைப்பதில்லை. அதன்பிறகு மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான், 1989-ல் மனசுகேத்த மகராசா திரைப்படம் வெளியாகிறது. 90-ல் வந்த வைகாசிப் பொறந்தாச்சு படம் தான் தேவா-வுக்கு பரவலமாக பெயர் வாங்கித் தருகிறது. இந்தப் போராட்டத்திலேயே 4 ஆண்டுகள் கடந்து விடுகிறது.

முரளி நடித்த தங்கராசு திரைப்படம்தான் தேவாவின் 25-வது திரைப்படம். சரத்குமாரின் வேடன் 50-வது படம், பிரபுதேவா நடித்த இந்து 75-வது படம். வேலுச்சாமி 100-வது படம், 150வது படம் கோபாலா கோபாலா, 175-வது படம் ஆஹா, 200-வது படம் பொன்னு வெளையிற பூமி. 200-வது படம் முதல் 375 வரை இதே நிலைதான். இதில் ஒன்றிரண்டு படங்களைத் தவிர, மற்ற படங்கள் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இதனால், இதுபோன்ற சாதனைகளை தேவா கடந்து சென்றதும் யாருடைய நினவைுகளிலும் இல்லாமல் போய்விட்டது.

பொதுவாக சினிமாவில் முதல் வெற்றி மிகவும் முக்கியமாக கருதப்படும். அந்த வெற்றி பலருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளைக் கொண்டு வரும். சிலர் அதைப்பிடித்துக் கொண்டு மேலும் மேலும் உயரங்களைத் தொட்டுவிடுவர், சிலருக்கு அது சரியாக அமையாது. ஆனால், தேவா போன்ற வெகு சிலர் மட்டும்தான் நிறைய தோல்விகளையும், சறுக்கல்களையும் தொடர்ந்து சந்தித்தாலும் தனது விடாமுயற்சியில் இருந்து விலகிச் செல்லாமல் காத்திருந்து, காத்திருந்து வெற்றியைத் தொட்டவர் தேவா!

இன்று - நவ.20: தேனிசைத் தென்றல் தேவா பிறந்தநாள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE