கேரள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரித்த ஹேமா கமிட்டி, தனது அறிக்கையை வெளியிட்டது. அது வெளியான பின் பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள் மீது சில நடிகைகள் புகார்களைக் கூறினர். மலையாள நடிகர் சங்கப் பொதுச் செயலாளராக இருந்த சித்திக் மீதும் துணை நடிகை ஒருவர் புகார் கூறியிருந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் ஓட்டலில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து சித்திக் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். கேரள உயர்நீதிமன்றம் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால் தலைமறைவான அவர், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமீன் பெற்றார்.
கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சித்திக் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு நேற்று வந்தது.
அப்போது, “இந்த வழக்கில், சம்பவம் நடந்து 8 வருடங்களுக்குப் பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக சித்திக் உட்பட 14 பேர் மீது முகநூலில் பதிவிட்டிருந்ததாக புகாரளித்தவர் கூறுகிறார். ஆனால், ஹேமா கமிட்டியில் புகார் அளிக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் அவர் ஏன் மவுனமாக இருந்தார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தற்போதைய நிலையில் அனைத்து விவகாரத்தையும் கருத்தில் கொண்டு சித்திக்கிற்கு முன் ஜாமீன் வழங்குகிறோம். அவர் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கும் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது.
» ‘ஓர் எதிர்பாராத முடிவு’... ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா தம்பதியர் விவாகரத்து அறிவிப்பு
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ நவ.20, 2024