சென்னை: அழுகையோ, ஆக்ரோஷமோ, கோபமோ, அன்போ வெள்ளித்திரையில் வெளிப்படும் காட்சிகளின் நீட்சி என்பது கடைக்கோடி சாமானியனின் வீடு வரை தாக்கம் செலுத்தும் வல்லமை படைத்தது. சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே பாதிப்பையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் செல்லுலாய்டு திரைமொழிகளுக்கு ஆற்றல் அதிகம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அந்த வகையில், 90-களுக்குப் பிறகு இளைஞர்களுக்கு ‘சமூக அக்கறை’யை தூண்டிய பல படைப்புகள் படையெடுத்தன. அவற்றில் ‘மாஸ்’ ஆக தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் சில இங்கே...
ஜென்டில்மேன்: கடந்த 1993-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘ஜென்டில்மேன்’. தகுதி இருந்தும் ‘இட ஒதுக்கீடு’ காரணமாக மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழந்த இளைஞன் தற்கொலை செய்துகொள்கிறான். அவனது இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்க நடக்கும் போராட்டமே படம். அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற முழக்கம் இந்தப் படத்தில் ஓங்கி ஒலித்தது. இட ஒதுக்கீட்டு முறையின் மறுபக்கம் குறித்து இளைஞர்கள் மனதில் விதையை தூவினார் இயக்குநர் ஷங்கர்.
சினிமா போன்ற வெகுஜன ஊடகத்தின் வாயிலாக பரிதாபத்தையும், வறுமையையும் பின்னணியாக கொண்டு ஷங்கர் செய்த சம்பவம், அதைத் தொடர்ந்த போராட்டங்கள்தான் இன்று ‘EWS’ பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை பெற்று தந்தது. 1993-ல் வெளியான இந்தப் படம் 2019-ல் ஏற்பட்ட மாற்றத்தின் தமிழ் சினிமா சார்பிலான துவக்கப் புள்ளியாக அமைந்தது. ‘இடஒதுக்கீடு’ முறைக்கு எதிரான படம் என்ற காட்டமான விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும், இளைஞர்களை ‘இடஒதுக்கீடு’ குறித்து சிந்திக்கவும் விவாதிக்கவும் தூண்டியதில் ‘ஜென்டில்மென்’ முக்கிய இடம் பிடித்தது.
இந்தியன்: புரையோடிக்கிடக்கும் லஞ்சம் ஊழலை வெளிச்சமிட்டு காட்டி இளைஞர்களுக்கு புதிய எழுச்சி பாய்ச்சிய திரைப்படம் ‘இந்தியன்’. ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இருசக்கர வாகனத்துக்கு லைசென்ஸ் பெறுவது தொடங்கி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சாமானிய ஊழியர் வரை நிர்வாகத்தில் மறைந்திருக்கும் லஞ்சத்துக்கு எதிராக சாட்டை சுழற்றிய படம்.
» பிக்பாஸ் 8: அடுத்த வைல்ட் கார்ட் எண்ட்ரி ரெடி; பிக்பாஸ் கொடுத்த ட்விஸ்ட்!
» 15 வருட காதல்: டிசம்பரில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் - மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்பதற்கிணங்க மகனாக இருந்தாலும், தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்ற சேனாபதியின் காட்டமான முடிவு, படம் பார்த்த இளைஞர்களுக்கு ‘நேர்மை’யின் அடர்த்தியை உணர்த்தியது. குறிப்பாக, அரசு அலுவலகங்களில் கூடுதல் பணம் கேட்பவர்களுக்கு எதிரான கேள்விகளை தொடுக்க தூண்டிய படம் ‘இந்தியன்’. அதன் நீட்சி 2-ம் பாகத்தில் மிஸ்ஸானது வருத்தமே!
முதல்வன்: இந்தியனைப் போல ‘முதல்வன்’ அரசு அதிகாரத்தை இளைஞர்கள் மூலம் கேள்வி கேட்க வைத்த ஷங்கரின் மற்றொரு அரசியல் பாடம். நரைத்த முடி, அடிதடி அரசியல், ஊழல் என பழுத்த அரசியல்வாதியை ஊடக அறம் சார்ந்து இயங்கும் இளைஞரின் கேள்விகள் எப்படி துண்டாட வைத்தன என்பது படத்தின் மையம். குழுமியிருக்கும் கூட்டத்தின் நடுவே, மாற்றுத் திறனாளி ஒருவர், “என்னைப் போல முடங்கியிருக்கும் இந்த நாட்டை நீங்கள் தான் மாற்ற வேண்டும்” என பேசும் சுஜாதாவின் சுடர்மிகு வசனம் கூஸ்பம்ப் தருணம்.
அரசியலில் இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்பதை பேசிய படம் ‘முதல்வன்’. அந்த முள் பாதையில் இருக்கும் சிக்கல்களையும் பேசியிருப்பார் ஷங்கர். அரசு அலுவலகங்களில் ஊழல் குறித்து தட்டி கேட்பது பின் அதிகாரத்தை அடைவது என ஒரு ஆர்டராக தனது படங்களை இளைஞர்களுக்காக சமர்பித்தவர் ஷங்கர்.
ஆயுத எழுத்து: சமூக அக்கறையில் ஷங்கரின் சீனியரான மணிரத்னம் இளைஞர்களை அரசியலுக்கு வரவழைக்கும் வகையில் இயக்கிய படம் ‘ஆயுத எழுத்து’. வெவ்வேறு தளங்களில் இயங்கும் இரு இளைஞர்களின் அரசியல் என்ட்ரியே கரு. அரசியல் அநீதிகளை பொதுவெளிக்கு கொண்டு வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற மணிரத்னம் - சுஜாதாவின் அறைகூவல் இளைஞர்களை சிந்திக்க தூண்டியது. கல்லூரிகளிலிருந்தே அரசியலைத் தொடங்கவும், அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவும் இளைஞர்களை தூண்டிய படங்களில் ‘ஆயுத எழுத்து’க்கு முக்கிய பங்குண்டு.
ரமணா: மணிரத்னம், ஷங்கர் வரிசையின் அடுத்த அடித்தோன்றலான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் ‘ரமணா’. பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தனது முன்னாள் மாணவர்களின் உதவியுடன் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடிவு செய்யும் ரமணா என்ற மனிதனைப் பற்றிய படம். இளைஞர்களால் தான் சமூகத்தில் ஊடுருவிக் கிடக்கும் ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை சுவாரஸ்யமான திரைக்கதையில் விதைத்தார் முருகதாஸ்.
குறிப்பாக, தனியார் மருத்துவமனையில் பித்தலாட்டங்களை ஒரு காட்சியில் உரித்து காட்டியிருப்பார். காவல் துறையில் பல சீனியர்கள் இருந்தபோதிலும், யுகி சேது போன்ற இளைஞரால் தான் விரைவாகவும், தெளிவாகும் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என்பதையும் நுணுக்கமாக அணுகியிருப்பார் இயக்குநர். இளைஞர்களை அரசியல்படுத்தவும், அநியாயத்துக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுக்கவும் வைத்த படம் ‘ரமணா’.
கத்தி: ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த ஷார்ப் சம்பவம் ‘கத்தி’. 2ஜி விவகாரத்துக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் குறிபார்த்து வீசிய கத்தி, சமூகத்தில் விவாதத்தை கிளப்பியது. கதிரேசன் - ஜீவானந்தம் என்ற சமூக அக்கறை கொண்டு இரண்டு இளைஞர்களின் போராட்டமே படம்.
பெருநிறுவனங்களால் விவசாயத்துக்கு ஏற்படும் ஆபத்து, அரசியல் கட்சி மீதான நேரடி தாக்கு, கம்யூனிசம் என சமரசமின்றி அரசியல் பேசிய படம். படம் கார்ப்பரேட் கோலா கம்பெனிகளுக்கு எதிரான மனநிலையை இளைஞர்களிடையே உருவாக்க முயற்சித்தது. விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு அச்சாணியாக அமைந்த படம்.
சர்க்கார்: முந்தைய படத்தில் திமுக மீதான விமர்சனத்தை தொடர்ந்து, இந்தப் படத்தில் இலவசங்கள் குறித்து இரு திராவிட கட்சிகளையும் விமர்சித்தது ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி. அது பெரும் விவாதத்தையும், எதிர்ப்பையும் பெற்று கொடுத்தது என்றாலும், வாக்குரிமை குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே உருவாக்கியது இந்தப் படம்.
தங்களுடைய ஜனநாயக கடமையை ஒருபோதும் விட்டு கொடுக்க கூடாது என்பதையும், அரசியலை சுத்தப்படுத்த இளைஞர்கள் களம் காண வேண்டும் என்பதையும் பேசிய படம். குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து அவர்களை அரசியல் களத்துக்கு அழைப்பு விடுத்த படம்.
இளைஞர்களுக்கு திரைவழியில் உற்சாகத்தையும் உணர்வுகளையும் ஊட்டி, அவர்களை அநீதிக்கு எதிராக போராடவும், அரசியல் நுழைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மேற்கண்ட படங்கள் அந்தந்த காலக்கட்டத்தில் வெளியாகி கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.