‘கங்குவா’ பட விமர்சனம்!

By KU BUREAU

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் இன்னைக்கு 3டியில் இன்று வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு சூர்யாவுடைய படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. வெளியீட்டிற்கு முன்பு படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

2024 மற்றும் 1070 என்ற இரண்டு காலக்கட்டங்களில் இந்தக் கதை நடக்கிறது. இதில் 2024ல் ஆராய்ச்சிக் கூடம் ஒன்றில் இருந்து தப்பி விடும் சிறுவன் ஒருவன் கோவாவில் இருக்கும் ஃபிரான்சிஸை (சூர்யா) சந்திக்கிறான். அவனைப் பார்க்கும்போதெல்லாம் சூர்யாவுக்கு பழைய நியாபகங்கள் வந்து போகிறது. இன்னொரு பக்கம் 1070களில் நடக்கும் ஐந்து தீவுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பை குறிப்பாக அங்குள்ள பெருமாச்சி தீவை தங்கள் போர்ப்பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறது ரோமானிய அரசு. இதற்காக, அவர்கள் ஐந்தீவுக்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். இந்த விஷயம் ஐந்தீவிற்குள்ளேயே போராக வெடிக்க, பெருமாச்சி இனத்தலைவன் கங்கா (சூர்யா) தன் இன மக்களை எப்படி காப்பாற்றினான்? ஃபிரான்சிஸிஸூக்கும் கங்காவுக்கும் என்ன தொடர்பு? என்பதுதான் ‘கங்குவா’ படத்தின் கதை.

கங்கா என்ற கதாபாத்திரத்தில் படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரையிலுமே தனி ஒருவனாக கதையை தாங்கிப் பிடித்திருக்கிறார் சூர்யா. குறிப்பாக கங்கா கதாபாத்திரத்திற்காக திடகாத்திரமாக உடம்பை மாற்றியது, தன் இன மக்களுக்காக ஆக்ரோஷமாக சண்டை செய்வது, பாசத்தில் உருகுவது என நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இதுதான் கதையின் பலமும் பலவீனமும். ஏனெனில், சூர்யா தவிர மற்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு கதையில் பெரிய முக்கியத்துவம் இல்லை. கதாநாயகி திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, கோவை சரளா போன்ற திறமையான நடிகர்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கங்கனை எதிர்க்கும் வில்லனாக பாபி தியோல். ஹீரோவுக்கு இணையாக இவருக்கும் தோற்றம், உடை, ஒப்பனை எல்லாமே இருக்கிறது. ஆனால், வழக்கமான பான் இந்தியா வில்லனாக கதாநாயகனிடம் அடிவாங்கி பரிதாபமாக இறந்து போகிறார். சூர்யாவுடன் வரும் சிறுவன் கொடுவா. இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு பல இடங்களில் அமெச்சூராக உள்ளது. கங்கா- கொடுவாவுக்கு இடையிலான பாசப்பிணைப்பு நன்று.

படத்தின் மிகப்பெரிய பலம் டெக்னிக்கல் டீம். ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி சிறப்பான பணியைக் கொடுத்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்துடைய இசையில் பாடல்கள் ஓகே ரகம். கதையின் பெரும்பகுதி ஆக்‌ஷனை மையப்படுத்தி இருப்பதால் இவருடைய இசை இரைச்சலாகவே கடந்து செல்கிறது. 1070களில் வரும் கதாபாத்திரங்கள் எளிய தமிழில் பேசினாலுமே தேவி ஸ்ரீ பிரசாத்தின் இரைச்சலான இசையால் எளிய வசனங்களும் பல இடங்களில் புரியாமல் இருக்கிறது. நிஷாத் யூசுப் படத்தொகுப்பு இறந்தகாலம் நிகழ்காலம் என மாறி மாறி வரும் இரண்டாம் பாதியில் கச்சிதமாக உள்ளது. சுப்ரீம் சுந்தருடைய ஆக்‌ஷன் கொரியோகிராஃபி, விஎஃப்எக்ஸ் பணி, கலை இயக்கம் இதெல்லாம் படத்தின் ப்ளஸ்.

படத்துடைய மிகப்பெரிய பலவீனம் அதன் திரைக்கதைதான். தன் இன மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் இனத்தலைவன் என்ற கதையை விதவிதமாக பல படங்களில் பார்த்து சலித்திருக்கிறோம். அதைத்தாண்டி கங்குவா படத்தில் புதிதாக எதுவுமே இல்லை. படம் ஆரம்பித்து முதல் அரைமணி நேரத்தைக் கடத்துவது கடினம் என சொல்லும் அளவுக்கு அதரப்பழசான காட்சிகளை கொண்டு வந்திருக்கிறார்கள். வெறுமனே ஆக்‌ஷனை வைத்து மட்டுமே பெரும்பாலான கதையை நகர்த்தி இருப்பது படம் பார்க்கும் நமக்கும் சலிப்பைத் தருகிறது.

முதல் பாகத்திலேயே கதையை முடிப்பதற்கான வாய்ப்பு இருந்தும் கிளைமாக்ஸில் கேமியோ கொண்டு வந்து இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்திருப்பது அயற்சி. நடிகர்களின் நடிப்பு, ஆக்‌ஷன், வலுவான தொழில்நுட்பக் குழு இவற்றை மட்டுமே நம்பி களமிறங்கி இருக்கும் மற்றுமொரு பிரம்மாண்ட பட்ஜெட் படம்தான் ‘கங்குவா’.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE