எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் கடைசியாக நடித்த திரைப்படம் ‘கட்டில்’. அவர் இன்று காலமான நிலையில், அவரது மறைவையொட்டி, அந்த திரைப்படத்தின் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு உருக்கமாக பேசியுள்ளார்.
“இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதிய சிவம் நாவலை தனுஷ் இயக்கி நடிப்பதற்க்காக பேச்சுவார்த்தை நடந்ததை ஆர்வத்தோடு என்னிடம் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். சந்தானம் படங்களுக்கு அவரது வசனப்பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாகா இயக்கத்திற்காக அவர் எழுதிய ஆனந்தபுரத்துவீடு மற்றும் ருத்ரவீணை தொடர்களில் அவரோடு பயணித்தது மறக்க முடியாதது.
பல சமயங்களில் பல இயக்குநர்கள் திரைப்படத்தில் நடிக்க அழைத்தும் மறுத்த அவர் எனது நட்புக்காக எனது கட்டில் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்தார். அவர் நடித்த முதலும் கடைசியுமான படமாக எனது திரைப்படம் அமைந்துவிட்டது. இன்று அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் மீளா துயரில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை" என்று இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு தெரிவித்துள்ளார்.