சென்னை:நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்' டாக்குமெண்ட்ரியின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவின் வெற்றிகரமான வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. இந்தப் பயணத்தை ரசிகர்கள் இன்னும் நெருக்கமாகத் தெரிந்து கொள்ளும் வகையில் அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ’நயன்தாரா: பியோண்ட் தி ஃபேரிடேல்’ என்ற ஆவணப்படம் வெளியாகிறது.
இன்று வெளியிடப்பட்ட டிரெய்லர் நயன்தாராவின் டாக்குமெண்ட்ரி கிளிம்ப்ஸாக உள்ளது. சாதாரண பெண்ணாக இருந்து லேடி சூப்பர் ஸ்டாராக அவர் ஏற்றம் பெற்றது வரையிலான பயணத்தை இந்த டாக்குமெண்ட்ரி காட்டுகிறது. நடிகர்கள் ராணா டகுபதி, டாப்ஸி பன்னு மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகிய திரைத்துறை நண்பர்கள், அவரது குடும்பத்தினர், கணவர், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இதில் நயன்தாரா குறித்து பேசியிருக்கிறார்கள். நடிகை, மகள், சகோதரி, மனைவி மற்றும் தாயாக அவரது பல்வேறு முகங்களையும் இவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.
இதுபற்றி நயன்தாரா பேசியிருப்பதாவது, "நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை சினிமாவில்தான் பகிர்ந்து கொண்டேன். ஆனால், இந்த ஆவணப்படம் எனது ரசிகர்களுக்கான பரிசு. என்னை வடிவமைத்த அத்தியாயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் என்னுடன் இருந்த ரசிகர்களுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் நன்றி” என்றார்.
» ’சிட்டாடெல்: ஹனி பனி’ வெப் சீரிஸ் விமர்சனம்
» “ஆரியத்தை தான் எதிர்க்க வேண்டும்; திராவிடத்தை அல்ல” - சத்யராஜ் கருத்து
இதுபற்றி பேசிய விக்னேஷ் சிவன்,“நயன்தாரா என் மனைவி, என் சிறந்த தோழி இதெல்லாம் தாண்டி என் வாழ்வில் மிகவும் மதிக்கும் நபர். அவர் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சவாலையும் நேருக்கு நேர் எதிர்கொண்டு, ஒவ்வொரு முறையும் வலுவாக அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார் என்பதில் எனக்கு பெருமை. சினிமாவைத் தாண்டி அவருடைய இன்னொரு அழகான பக்கத்தை ரசிகர்கள் பார்க்க இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி” என்றார்.