திருவனந்தபுரம்: நடிகர் நிவின் பாலிக்கு எதிராக கொடுக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி புகார் கேரளா திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது. இதில் பல நடிகர்கள் பெயரும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நடிகர் நிவின் பாலி மீதும் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தது பேசுபொருளானது. நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி நடிகர் நிவின் பாலி உட்பட ஆறு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பதுதான் அவர் குற்றச்சாட்டு.
இந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிவின் பாலி மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. ஆனால், தன் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டை நிவின் பாலி கடுமையாக மறுத்தார். அப்பெண் தெரிவித்திருக்கும் சம்பவம் நடந்த 2023 டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகள் நிவின் பாலி துபாயில் இல்லை என்றும் அவர் கேரளாவில்தான் இருந்தார் என்பதற்கான பயணச்சீட்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் நிவின் பாலி மீதான இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், இது பொய் என்றும் சொல்லி அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.