மும்பை: மானை வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேளுங்கள் அல்லது ரூ.5 கோடி கொடுங்கள் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்த மிரட்டலை விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பை காவல்துறையின் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் என்று கூறிக்கொண்ட ஒரு நபரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், சல்மான் கான் தொடர்ந்து உயிர்வாழ விரும்பினால் அவர் எங்களின் கோயில் ஒன்றுக்குச் சென்று மானை வேட்டையாடியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லையென்றால் கொலை செய்யப்படுவார். எங்களின் கும்பல் இப்போதும் செயல்பாட்டில் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் ஹெல்ப்லைனில் நேற்று நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்தது.
மிரட்டல் விடுத்தவர் மகாராஷ்டிர மாநில அமைச்சர் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியுள்ளார். சல்மானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சல்மான் கானுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அந்த மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
» பொதுநலன் என்ற பெயரில் அனைத்து தனியார் சொத்துகளையும் அரசு கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்
» தமிழக கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை: நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் என்ற பெயரில் இந்த மிரட்டல் வந்துள்ளதால் கொலை முயற்சி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு இதில் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே, ரூ.2 கோடி கேட்டு சல்மான் கானுக்கு பிஷ்னோய் கும்பலிடமிருந்து மிரட்டல் வந்தது. இந்த வழக்கு மும்பை வொர்லி போலஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக நொய்டாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முகம்மது தைய்யப் (எ) குர்ஃபான் கானை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது