'பிரதர்' - விமர்சனம்!

By KU BUREAU

ராஜேஷ் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘பிரதர்’. சிறுவயதில் இருந்தே பாயிண்ட் பிடித்து பேசுவதில் எக்ஸ்பர்ட் சட்டக்கல்லூரி மாணவர் ஜெயம் ரவி (கார்த்திக்). ஆனால், போகிற இடத்தில் எல்லாம் பாயிண்ட் பிடித்துப் பேசி வம்பிழுத்து வரும் பொறுப்பில்லாத கேரக்டர் கொண்டவராக இருக்கிறார் ஜெயம் ரவி. இவருடைய இந்த குணாதிசயம் ஜெயம் ரவி அப்பாவிற்கே பிரச்சினையாக மாற ஜெயம் ரவியை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்கள். அப்போது ஜெயம் ரவியின் அக்கா பூமிகா (ஆனந்தி) அவரை திருத்தி நல்ல பையனாக மாற்றுவேன் என சொல்லி தன்னுடன் அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அங்கும் குடும்பமே பிரியும் அளவிற்கு ஜெயம் ரவியால் பிரச்சினை வெடிக்கிறது. இந்த பிரச்சினை தீர்ந்ததா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பது தான் ‘பிரதர்’ படத்தின் கதை.

பொறுப்பில்லாமல் சண்டையிழுக்கும் கதாபாத்திரத்தில் வழக்கம் போலவே குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. அவருக்கு ஆதரவு கொடுக்கும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன். இவர்களைத் தவிர சப்போர்ட்டிங் கதாபாத்திரத்தில் நட்டி, சரண்யா பொன்வண்ணன், சீதா என குடும்ப கதைகளுக்காகவே நடித்து பழக்கப்பட்ட பல முகங்களைப் பார்க்க முடிகிறது.

தேர்ந்த நடிகர்களான இவர்கள் பல இடங்களில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தாலும் சில இடங்களில் செயற்கைத்தனமான நடிப்பே எஞ்சுகிறது. பாசமான, பொறுப்பான அக்காவாக பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார் பூமிகா.

இயக்குநர் ராஜேஷின் முந்தின படங்கள் போலவே, காமெடி, ரொமான்ஸ், ஃபேமிலி வேல்யூஸ் உள்ளிட்ட விஷயங்களோடு கமர்ஷியல் எண்டர்டெயினராக ‘பிரதர்’ படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது மெகா சீரியல் போல இழுத்துக் கொண்டிருப்பது தான் சோகம். சந்தானம் இல்லாத இடத்தை விடிவி கணேஷை வைத்து நிரப்ப முயற்சி செய்திருக்கிறார்.

விடிவி கணேஷ் காமெடி பல இடங்களில் சிரிக்க வைப்பதற்கு பதிலாக தலைவலியாக மாறியிருக்கிறது. முதல் பாதி முழுவதும் பொறுப்பில்லாத பையனாக வரும் ஜெயம் ரவி இரண்டாம் பாதியில் திடீரென பொறுப்பானவராக மாறுவது நம்பும்படியாகவும் இல்லை. அக்கா-தம்பிக்குள்ளான பாசக்காட்சிகள் பல இடங்களில் கனெக்ட் ஆனாலும் சில இடங்களில் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் மக்காமிஷி பாட்டும் அக்கா-தம்பி பாடலும் ஹிட். மற்றபடி பின்னணி இசை சுமார் தான். விவேகானந்தனுடைய ஒளிப்பதிவில் ஊட்டி கண்களுக்கு குளிர்ச்சி. தன்னுடைய வலுவான ஜானரான காமெடி, காதல், குடும்ப செண்டிமெண்ட்டை இந்த காலத்திற்கு ஏற்றபடி திரையில் கொண்டு வர முயன்று தடுமாறி இருக்கிறார் ராஜேஷ். ஸாரி பிரதர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE