’அமரன்’ - விமர்சனம்!

By KU BUREAU

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அமரன்’ படம் தீபாவளி ரேஸில் முந்தி நிற்கிறது.

சிறுவயதில் இருந்தே இந்திய ராணுவத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் ராணுவத்தில் இணைகிறார் முகுந்த். கல்லூரி படிக்கும் காலத்தில் தனக்கு ஜூனியரான இந்துவை காதலித்து பலக்கட்ட போராட்டங்களுக்குப் பிறகு கரம் பிடிக்கிறார். ராணுவத்தில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே லெப்டினென்ட், கேப்டன், மேஜர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெறுகிறார் முகுந்த்.

காஷ்மீர் எல்லைப் பகுதியில் அல்டாஃப் பாபா எனும் பயங்கரவாதியை ஆப்ரேஷன் மூலம் கொல்கிறார். அல்டாஃப் பாபா மரணத்திற்கு பழிவாங்கும் விதமாக அடுத்தடுத்து சம்பவங்கள் நடைபெறுகிறது. பொதுமக்களை பணயம் வைத்து நடக்கும் இந்த ஆப்ரேஷனை முகுந்த் எப்படி எதிர்கொள்கிறார், தன்னுடைய அணியை அவர் எப்படி வழிநடத்துகிறார், குடும்பத்தின் மீது அவர் வைத்திருக்கும் அன்பு, காதல் மனைவி இந்து மீதான ப்ரியம் என நகர்கிறது ‘அமரன்’.

படத்தின் முதல் பாதி காதல், ராணுவத்தில் சேருதல், காதலுக்கு குடும்பத்தின் எதிர்ப்பு என கதை எமோஷனலாக நகர்கிறது. குறிப்பா முதல் பாதியின் கடைசி 20 நிமிடம் பரபரவென நகர்ந்து பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறது. இராணுவம், ஆப்ரேஷன் என்பதாக மட்டுமில்லாமல் இந்து - முகுந்த் இடையிலான காதல் காட்சிகளையும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் கமர்ஷியலுக்காக எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் உண்மைக்கு நெருக்கமாக படமாக்கியிருப்பது ஆறுதல்.

இடைவேளை காட்சி பரபரவென்று இருந்தால், கிளைமாக்ஸ் காட்சி நெகிழும்படியாக அமைத்திருக்கிறார். மேஜர் முகுந்திற்கான சமர்ப்பணம் இந்தப் படம் என்பதை உணர்ந்து நடிப்பில் அடுத்த பாய்ச்சல் காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்துவிடம் உருகுவது, இராணுவத்தில் தன்னுடைய டீமை காப்பாற்றுவது, உடலை அதற்காகவே தயார் செய்திருப்பது என சிறப்பாக நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் vs சாய்பல்லவி என சொல்லும் அளவிற்கு நடிப்பில் இருவரும் போட்டி போட்டிருக்கிறார்கள். இந்து கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சாய்பல்லவி. இவர்கள் மட்டுமில்லாது முகுந்தின் அம்மா- அப்பா, இந்துவுடைய அம்மா, அப்பா, அண்ணன்கள் கதாபாத்திரங்கள், முகுந்தின் நண்பராக வரும் விக்ரம் சிங் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ் இசையில் மின்னலே பாடலும் பின்னணி இசையும் சிறப்பு. முதல் பாதி எமோஷனல், ஆக்‌ஷன் என நகரும் கதை பல இடங்களில் ஜம்ப் ஆகிறது. இராணுவம் தொடர்பான காட்சிகளை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE