1980 களின் பிற்பகுதியில் துவங்கி 1992 வரை ஒரு வங்கி காசாளரின் வாழ்க்கையில் நடைபெறும் பரபர திருப்பங்கள் தான் ’லக்கி பாஸ்கர்’. மும்பையில் இயங்கி வரும் மகதா வங்கியில் காசாளராக பணிபுரிபவர் பாஸ்கர் குமார் (துல்கர் சல்மான்). நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் தான் குடும்பத்தில் மூத்த பையன். மனைவி, மகன், தம்பி, தங்கை, உடல்நிலை சரியில்லாத அப்பா என மொத்த குடும்பத்தையும் கரை சேர்க்கும் பொறுப்பும் அழுத்தமும் இருக்கிறது.
ஆனால், இந்த தேவைகளுக்கான வருமானம் அவரிடம் இருக்கிறதா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறி தான். இந்த பணத்தேவை அழுத்தம் அதிகமாகி வரும் சமயத்தில் கடன்காரர்களின் அவமானம், எதிர்பார்த்த புரோமோஷன் கிடைக்காத விரக்தி இதெல்லாம் சேர்ந்து பணம் அவரை வேறு திசைக்கு கொண்டுச் செல்கிறது.
ஒருநாள் அவர் சிபிஐ அதிகாரிகளால் சுற்றி வளைத்து விசாரிக்கப்படுகிறார். அந்த அதிகாரிகளுக்கே தலைசுற்றும் அளவிற்கு அவருடைய வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. ஒரு சாதாரண வங்கி ஊழியர் கணக்கில் எப்படி இவ்வளவு பணம்? பணப்பற்றாக்குறை ஒருவருடைய வாழ்க்கையில எந்த மாதிரியான அவமானங்களைத் தரும்? இதனால் அவர் செய்யும் தவறுகள் என்ன? அது அவருடைய வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்களைத் தருகிறது என்பது தான் ’லக்கி பாஸ்கர்’.
படத்தை ஒன்மேன் ஷோவாக தாங்கி நிற்கிறார் துல்கர் சல்மான். கடன்காரர்களுடைய மிரட்டல், வறுமை துரத்துவது, பணம் வந்ததும் அவர் காட்டும் திமிர், மாட்டிக் கொள்ளும் சூழலில் அவர் காட்டும் பதற்ற என காட்சிக்கு காட்சி நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கணவருக்கு ஆதரவு கொடுக்கும் காதல் மனைவியாக மீனாட்சி செளத்ரி (சுமதி). தன் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இவர்கள் தவிர நடிகர்கள் ராம்கி, துல்கருடைய நண்பராக வருபவர் என அனைத்து கதாபாத்திரங்களும் தேவை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரும் பலம் ஜிவி பிரகாஷுன் இசையும் நவீன் நூலியுடைய படத்தொகுப்பும் தான். பங்ளானுடைய கலை இயக்கத்தில் 80-90களின் பம்பாய் செட் என்பது ஆரம்பத்தில் துருத்திக் கொண்டு தெரிந்தாலும் கதையோட்டத்தில் போகப்போக மறக்க வைக்கிறது.
பரபரவென நகரும் திரைக்கதையும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த துல்கருடைய கதாபாத்திரமும் அவர் சந்திக்கும் அவமானங்களும், பலரும் தங்களுடன் கனெக்ட் செய்து கொள்ள முடிவது பிளஸ். வங்கியில் இருந்து பணம் திருடும் போது அவர் மாட்டிக் கொள்ள மாட்டார் என நம்மால் முன்பே கணிக்க முடிந்தாலும் திரையில் பாஸ்கருக்கு வரும் பதற்றமும், அவர் பிரச்சினையில் இருந்து வெளியே வரும்போது நாமும் ரிலாக்ஸ் ஆவது என கதையோட்டத்தில் பார்வையாளர்களையும் உள்ளே இழுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
‘நான் பேட் கிடையாது, ஐயம் ஜஸ்ட் ரிச்’, ‘பணம் சம்பாதிக்கறது அவசியம் தான். ஆனா, நீ அதுக்கு அடிமையாகிட்ட’ என பல வசனங்கள் கவனிக்க வைக்கிறது. பாஸ்கரிடம் பணம் சம்பாதிக்கும் போது தெரியும் மாற்றத்தினை கேள்வி கேட்கும் சுமதி, இந்தப் பணம் எப்படி வந்தது என்பது பற்றி அழுத்தமாக ஒரு இடத்தில் கூட கேள்வி கேட்காதது ஏன்? திடீரென துல்கருடைய அப்பா அவரிடம் பேசி மனம் மாற வைப்பது ஏன்? என்ற கேள்விகளும் ஆங்காங்கே லாஜிக் மீறல்களும் படத்தில் இருக்கவே செய்கிறது. ஆனால், இந்த குறைகளை எல்லாம் படத்தின் பரபர திரைக்கதை மறக்க வைத்து தீபாவளி ரேஸில் சரவெடி கொளுத்துகிறது ‘லக்கி பாஸ்கர்’.