’கங்குவா’ படத்தின் படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப் எதிர்பாராத விதமாக இன்று அதிகாலை காலமானது திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் அடுத்த மாதம் 14ஆம் தேதி ‘கங்குவா’ படம் வெளியாக இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப் படத்தில் நிஷாத் யூசுப் (43) படத்தொகுப்பாளராகப் பணியாற்றி இருந்தார். இவர் இன்று அதிகாலை 2 மணியளவில் கேரளா, கொச்சியில் உள்ள அவரது அப்பார்ட்மெண்டில் காலமாகி இருப்பது ‘கங்குவா’ படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சூர்யா- ஆர்.ஜே. பாலாஜி அடுத்து இணையும் ‘சூர்யா 45’ படத்திலும் படத்தொகுப்பாளராகப் பணியாற்ற ஒப்பந்தமாகியிருந்தார். நிஷாத் யூசுப்புக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
மலையாளத்தில் பிஸியாக இருந்த நிஷாத் யூசுபுக்கு டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ‘தல்லுமலா’ படத்திற்காக கேரள அரசின் மாநில விருது வழங்கப்பட்டது. ’கங்குவா’ படத்தின் கலை இயக்குநர் மிலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், இப்போது படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப்பும் உயிரிழந்திருப்பது திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நிஷாத் யூசுப் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.