‘அமரன்’ போர் குறித்த படமல்ல; ஆனால்... - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

By KU BUREAU

தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’. காஷ்மீரில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் ‘பயோபிக்’ இது.

இந்தப் படத்துக்காக முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபக்காவாக சாய் பல்லவியும் மாறியிருக்கின்றனர். காதலும் காஷ்மீரில் ஆக்‌ஷனும் என மிரட்டுகிறது படத்தின் ட்ரெய்லர். படம் பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அளித்த பேட்டியில் இருந்து...

ஷிவ் அரூர் எழுதிய ‘இண்டியா’ஸ் மோஸ்ட் ஃபியர்லஸ்’ புத்தகம்தான் ‘அமரன்’ உருவாகக் காரணமா? - “ஆமா. சோனி பிக்சர்ஸ் அந்தப் புத்தகத்தோட உரிமையை வாங்கி வச்சிருந்தாங்க. வீரமரணமடைந்த சில ராணுவ வீரர்களோட தீரமான போர் சம்பவங்களை உள்ளடக்கிய டாக்குமென்ட் அது.

‘அதுல ஒரு தமிழ் வீரர் பற்றி, 11 பக்கத்துல ஒரு பதிவு இருக்கு. அவர் பற்றி தமிழ் அல்லது தெலுங்குல படம் பண்ணலாம்னு சோனி நிறுவனம் நினைக்குது’ன்னு எனக்குச் சொன்னாங்க. அது மேஜர் சரவணனா இருக்கும்னு நான் நினைச்சேன். அப்புறம்தான் அது முகுந்த் வரதராஜன்னு தெரியவந்தது.

அவர் நடத்திய 2 ஆபரேஷன்கள் பற்றிய தகவல்கள் மட்டும் அந்தப் புத்தகத்துல இருந்தது. பயோபிக் படம் எடுக்கிறோம்னா, நிஜத்தை பிரதிபலிக்கணும், சுவாரஸ்யமான சினிமாவாகவும் வரணும். அதனால நிறைய ஆய்வு பண்ண வேண்டியிருந்தது. அதுமட்டுமில்லாம சில கற்பனையான விஷயங்களையும் சேர்த்தோம்.”

சிவகார்த்திகேயன் வந்தது எப்படி? - “இந்தக் கதைக்கு புதுமுகத்தை நடிக்க வச்சா நல்லாயிருக்கும்னு கமல் சார் சொன்னார். ஆனா, அது சரியா வருமான்னு யோசிச்சோம். நடிகர் சிவகார்த்திகேயனை, எனக்கு 10 வருஷத்துக்கு மேல தெரியும். அவரை நடிக்க வைக்கலாம்னு நான் நினைச்சேன். கதை சொன்னேன். கேட்டதுமே ஆர்வமாகி பண்றேன்னுட்டார்.”

சிவகார்த்திகேயனை எப்படி மாற்றியிருக்கீங்க? - “ஒரு கம்பீரமான ராணுவ வீரரா மனரீதியாகவே மாறுறதுக்கு ரொம்ப பயிற்சி எடுத்தார். நிஜமான ராணுவ பயிற்சிங்கறது ரொம்ப கடுமையா இருக்கும். அதை நம்ப வைக்கறதுக்காக உடலை மாற்றினார். இதுல அவருக்கு 3 வெவ்வேறு தோற்றம் இருக்கு. நல்லா எழுதப்பட்ட திரைக்கதை இருந்தா, அதுல எல்லா ‘டீட்டெய்லு’மே இருக்கும். முடிஞ்சவரைக்கும் சிவகார்த்திகேயனுக்கு, அது எல்லாத்தையும் கொடுத்துட்டேன். அதனால அவருக்கே என்ன பண்ணணும்னு தெரியும். ரொம்ப மெனக்கெட்டிருக்கார். அவர் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைக்கும்னு நினைக்கிறேன்.”

சாய் பல்லவி பற்றி... - “மேஜர் முகுந்த் வரதராஜனோட மனைவி, இந்து ரெபக்கா வர்கீஸ் கேரக்டருக்கு அவங்கதான் சரியா இருப்பாங்கன்னு நினைச்சோம். அருமையா நடிச்சிருக்காங்க.”

காஷ்மீரில் ராணுவ ஒத்துழைப்பு இருந்ததா? - “ராணுவத்தோட இணைஞ்சுதான் ஷூட் பண்ணியிருக்கோம். மேஜர் முகுந்த் பணியாற்றிய அதே இடத்தைதான் படத்துல அவர் அலுவலகமா காட்டியிருக்கோம். இந்தப் படத்தை அவங்க பெருமையா பார்க்கிறாங்க.”

போர் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த மாதிரி இருக்கே... - “இது போர் பற்றிய படம், யுத்தக்களத்துல நடக்கிற படம்னு நினைக்கிறாங்க. அப்படியில்லை. ஆனா அதுவும் இருக்கும். ஒரு ராணுவ வீரரோட வாழ்க்கை பயணம்தான் கதை. அதுல குடும்பம் இருக்கு, அவங்க எப்படி அந்த வாழ்க்கையை எடுத்துக்கிறாங்க, காஷ்மீருக்குன்னு ஒரு சூழ்நிலை இருக்கு. அதுல ராணுவத்தோட ரோல் என்ன? உள்ளூர் மக்கள் எப்படி நடந்துக்கிறாங்கன்னு கதை போகும். மேஜர் முகுந்த் வரதராஜன் எதையெல்லாம் கடந்து வந்தாரோ அதெல்லாம் படத்துல இருக்கும்.”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE