கங்குவா பெரிய தலைவாழை விருந்து: நடிகர் சூர்யா தகவல்

By KU BUREAU

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘கங்குவா’. இதில், திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், கே.எஸ்.ரவிகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ள இந்தப் படம் நவ.14-ம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

விழாவில் சூர்யா பேசும்போது, “சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது ஒரு குரல். அதனால், சினிமாவை நாம் நிச்சயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் செல்லும் அத்தனை உழைப்பையும் நாங்கள் அனைவரும் இந்தப் படத்துக்கு கொடுத்திருக்கிறோம். இந்தப்படம் பெரிய தலைவாழைவிருந்து. மலை உச்சியில் இருக்கும் கொம்புத் தேனாகவும், எட்டாக்கனியாகவும் பார்க்கலாம்.

ரசிகர்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்காக நேரத்தை வீணாக்க வேண்டாம். என்ன வெறுப்பைக் கொடுத்தாலும், அன்பை மட்டும் பரிமாறுவோம். சூரியன் மேலேயே இருந்தால் புது நாள், புது வளர்ச்சி கிடைத்திருக்காது. அதுபோலதான் என் ஏற்ற, இறக்கங்களைப் பார்க்கிறேன்.

உதயநிதி ஸ்டாலின் என் கல்லூரி ஜூனியர். அவரை 'பாஸ்' என்று கூப்பிடுவேன். அவர் என்னை வைத்து 2 படங்கள் தயாரித்திருக்கிறார். இப்போது துணை முதல்வர் ஆகியிருக்கும் அவருக்கு என் வாழ்த்துகள். என் இன்னொரு நண்பர் (விஜய்) புதிய பயணத்துக்காக புதிய பாதை போட்டிருக்கிறார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE