தவெக முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்க்கு திரையுலக நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் நடக்கிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்து வரும் நிலையில், மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பேசுகிறார்.
விஜய் நடித்து வரும் ’விஜய் 69’ தான் அவருடைய நடிப்பில் வெளியாகவுள்ள கடைசி படமாகும். அதற்கு பின் முழுநேர அரசியலில் கவனம் செலுத்தவுள்ளதாக விஜய் அறிவித்துவிட்டார். முன்னணி நடிகராக இருக்கும் போதே, திரையுலகில் இருந்து விஜய் விலகுவதை திரையுலகினர் பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
விஜய் தனது முதல் அரசியல் கட்சி மாநாட்டை நடத்துவதை முன்னிட்டு, திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு:
» தொப்புள் கொடி கத்தரித்த விவகாரம்: உதவியாளர் மூலம் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
» பிக்பாஸ்8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தமிழ்நாட்டில் பல கட்சிகள் உதயமாகியுள்ளன. ஆனால் மக்கள் ஆதரவைப் பெறுவது தான் முக்கியம். பல கட்சிகள் காணாமல் போயும் உள்ளன. ஒரு தயாரிப்பாளராக நான் முதலில் தயாரித்ததே விஜய் படம் தான். அந்த வகையில் நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.”
நடிகர் பிரபு: “விஜய் தைரியமாக அரசியல் கட்சி தொடங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தைரியமாக இறங்கி அடித்து நொறுக்குகிறார் என்றால் அவருக்கு இறைவன் அருள் உள்ளது. விஜய்க்கு எனது முழு ஆதரவு எப்போதும் உண்டு. அதைப்போல என்னுடைய தந்தை ஆசியும் அவருக்கு உண்டு. ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் நல்ல நிலைக்கு வரவேண்டும் என ஆசிர்வதிக்கிறேன்.”
சிவகார்த்திகேயன்: “இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”
விஜய் சேதுபதி: “தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு சிறக்க, தவெக தலைவர் விஜய் சாருக்கும், தொண்டர்களுக்கு வாழ்த்துகள்.”
ஜெயம் ரவி: “தவெக கட்சியின் மாநாட்டுக்கு விஜய் அண்ணாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். திரையுலகில் காட்டிய அதே ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் அரசியலில் கொண்டு வாருங்கள். இந்தப் புதிய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.”
சிபிராஜ்: “தவெக கட்சியின் முதல் மாநாட்டுக்கு விஜய் அண்ணாவுக்கு எனது வாழ்த்துகள். அவருடைய பேச்சை எதிர்நோக்கி இருக்கிறேன். அவரது புதிய பயணம் அவருக்கு வெற்றியை தரட்டும்.”
அர்ஜுன் தாஸ்: “விஜய் சாருக்கு வாழ்த்துகள்.”
தன்ஷிகா: “தமிழக வெற்றிக் கழகம் மாற்றத்தை எதிர்பார்த்து வாழ்த்துகிறோம் விஜய் சார்.”
வசந்த் ரவி: “மனமார்ந்த வாழ்த்துகள் விஜய் சார். உங்கள் அற்புதமான தொடக்கத்திற்கு. உங்கள் படங்கள் மூலம் மட்டும் எங்களில் பலரும் உண்மையிலேயே உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள். விரைவில் உங்கள் அரசியல் பயணத்திலும் நினைவுக் கூரப்படுவீர்கள், பாராட்டப் படுவீர்கள். இன்று உங்களுக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.”
சசிகுமார்: “உங்கள் வரவு, எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும். நல்வாழ்த்துகள்… விஜய் சார்.”
சுரேஷ் காமாட்சி: “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், தளபதி விஜய் அவர்களின் அரசியல் முன்னெடுப்புக்கு வாழ்த்துகள். ஒரு தொடரியைப் போன்று பல உள்கட்டப் பெட்டிகளைக் கோர்த்துக்கொண்டு தொடங்கும் நீண்ட பயணத்தையும்... எதிர்கொள்ளும் சுமைகளை சமாளிக்கும் அதீத பலத்தையும் இறை தரட்டும்.
மக்கள் நிறையும் வெற்றி மாநாடாக இம்மாநாடு அமையட்டும். குழப்பும் கேள்விகளும் அசைத்துப் பார்க்கும் பலமும் சோதிக்கும். தாண்டி பலம் பெற்று வெற்றி பெற வாழ்த்துகிறேன். மக்களோடு மக்களாக இணைந்து பயணிக்கும் இப்பாதை உங்களுக்கு இனிதாகவும்.. லாவக கையாள்தலாகவும் அமைந்து மாற்றங்களை முன்னிருத்தட்டும்.”
நெல்சன்: “என் மனமார்ந்த வாழ்த்துகள் விஜய் சார்... இன்று உங்கள் புதிய தொடக்கத்திற்கு”
ஆர்.ஜே.பாலாஜி: “அன்புள்ள விஜய் சார், சினிமாவை விட்டுவிட்டு தேர்தல் அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு பெரிய முடிவு. உங்களின் மிகப் பெரிய பயணம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்!|
இயக்குநர் வெங்கடேஷ்: “பிரம்மாண்ட கூட்டத்துடன் பெரும் எதிர்பார்ப்புடன் ஆரம்பமாக இருக்கும் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!”
அஸ்வத் மாரிமுத்து: “என் நெஞ்சில் குடியிருக்கும்“ என்று நீங்கள் இன்று கூறியவுடன் அலறபோகும் தமிழகத்தை காண காத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். வாழ்த்துகள் விஜய் சார்.”