திரை விமர்சனம்: சார்

By KU BUREAU

மாங்கொல்லை என்ற கிராமத்துக்கு ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஜெயபாலன் தலைவராக இருக்கிறார். அவருக்கும், அந்த ஊரில் பள்ளிக்கூடம் அமைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி கொடுக்க முயலும் அண்ணாதுரை என்ற ஆசிரியருக்கும் பகை மூள்கிறது.

காலங்கள் ஓட, பொறுப்பற்ற ஆசிரியராக இருக்கும் அண்ணாதுரையின் பேரன் ஞானம் (விமல்) தனது தாத்தா, தந்தையின் லட்சியத்தை உணர்ந்து, அந்த ஊரின் பள்ளிக் கூடத்துக்கு வரும் தடைகளை எப்படித் தடுக்கிறார் என்பது கதை.

60-களில் தொடங்கி 80-கள் வரை கதை நடக்கிறது. ஆதிக்கச்சாதியை சேர்ந்தவர்கள், அங்குள்ள நாட்டார் வழிபாட்டு முறையைப் பயன்படுத்தி, எளிய மக்கள் கல்வி பெறமுடியாத வகையில் எப்படித் தடையை ஏற்படுத்துகிறார்கள், அதில் ஆசிரியர் அண்ணாதுரை எப்படியெல்லாம் பாதிக்கிறார், பிறகு அவருடைய மகன் சரவணன் இந்தப் பூசலை எதிர்த்து என்ன சாதித்தார், அவருடைய மகன் ஞானம் எப்படிப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார் என மூன்று தலைமுறைக் கதையாக அமைக்கப்பட்டுள்ளது திரைக்கதை.

இப்படியொரு சீரியஸான கதைக்குள் காதலைத் திணித்ததும் காலமாற்றத்தில் ஊரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காட்ட வைக்கப்பட்ட காட்சிகளும் எடுபடவில்லை. காரணம் அவைகாலகட்டத்தின் மாற்றங்களை வரலாற்றைத் தொட்டுக்கொண்டு பிரதிபலிக்காததுடன் அவற்றில் புதுமையும் இல்லை.

60-களில் கிட்டத்தட்ட ஆண்டான் - அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அதேபோல் 80-களில், மனநலம் குன்றியவர்கள், அல்லது மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப் பட்டவர்களை, ஜாம்பிக்களைப் பார்த்துப் பயந்து ஓடுவதுபோலவும் அல்லது கூட்டமாகக் கூடி மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள் என்பதுபோலவும் சித்தரிக்கப்பட்டிருப்பது தர்க்கப் பிழையுடன் கூடிய மிகை.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பற்றிஇயக்குநர் எடுக்கும் பாடம், சமூகத்தின் மனநிலையில் ஏற்கெனவே பதிந்துகிடக்கும் ஒன்றே. அதைப் புதிது போல்காட்ட முயன்றதில் தவறில்லை. ஆனால், அதை எப்படிச் சித்தரிப்பது என்பதில்தான் சிக்கல். அதேநேரம், கடவுளின் பெயரால் நடக்கும் மூடத்தனங்களைப் புறந்தள்ள முடியாதவர்களாக மக்கள் இருப்பதையும் ஆதிக்கச்சாதி மனோபாவம் அப்படியே தொடர்வதையும் சித்தரித்த விதத்துக்காக இயக்குநரைப் பாராட்டலாம். ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு ஆகிய தொழில்நுட்பப் பங்களிப்பு படத்துக்குப் பலம்.

நாயகனாக வரும் விமலும் நாயகியாக வரும் சாயாதேவியும் பொருத்தமான இணையாகக் கவர்கிறார்கள். ஜெயபாலன், சரவணன், ரமா ஆகியோர் தங்களுக்குத் தரப்பட்ட கதாபாத்திரங்களைப் பொறுப்புடன் அணுகி நடித்திருக்கிறார்கள்.

திரைக்கதையில் சிக்கல்களும் காட்சிகளில் குறைகளும் இருந்தாலும்கல்வியைப் பெறமுடியாமல் பின் தங்கிய நிலையிலிருக்கும் மக்களுக்காகக்கடைசிவரை உறுதியுடன்போராடும் கதாபாத்திரங்களை முன்னிறுத்தி இருப்பதால் இந்த ஆசிரியருடன் ஒருமுறை கை குலுக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE