’ப்ளடி பெக்கர்’ படத்தில் கவினை நிராகரத்த இயக்குநர் நெல்சன்!

By KU BUREAU

’ப்ளடி பெக்கர்’ படத்தில் நடிக்க முதலில் கவின் ஒப்பந்தமானபோது தயாரிப்பாளராக அவரை நிராகரித்ததாக இயக்குநர் நெல்சன் பேசியிருக்கிறார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் நெல்சன், “’வேட்டை மன்னன்’ படத்தின் போது என்னிடம் சிவபாலன் சேர்ந்தார். ’ஜெயிலர்’ படம் வரையிலுமே என்னிடம் வேலை பார்த்தார். ‘ஜெயிலர்’ பட சமயத்தில்தான் இந்தக் கதையைச் சொன்னார். நீண்ட நாட்கள் என்னிடம் வேலை பார்த்ததால் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ‘ஜெயிலர்’ வெற்றிப் பெற்றால் மட்டுமே சிவபாலன் படம் தயாரிப்பேன் என்று சொல்லியிருந்தேன். இதனால், ‘ஜெயிலர்’ படம் வெற்றி பெற வேண்டும் என அவர்தான் மிகவும் எதிர்பார்த்திருந்தார்.

படம் வெற்றி பெற்றதும் ‘ப்ளடி பெக்கர்’ தயாரிப்பது உறுதியானது. கவினை வைத்து செய்யலாம் என சிவபாலன் சொன்னார். ஆனால், இந்தக் கதைக்கு கவின் சரியாக இருப்பார் எனத் தோன்றவில்லை. தனுஷ், விஜய்சேதுபதி என சில பெயர்களை சிவபாலனிடம் சொன்னேன். ஆனால், அவர் கவின் தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து லுக் டெஸ்ட் செய்தார். அப்போதே இந்தக் கதையில் சிவபாலன் எவ்வளவு டீடெய்லிங்காக செய்திருக்கிறார் என்பது தெரிந்தது.

படத்தின் முதல் பாதி நன்றாகவே செய்திருந்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. முழுப்படமும் பார்த்தபோது சிவபாலனுக்குப் பிறகு சிறப்பாக வேலை செய்திருப்பது கவின்தான். பல காட்சிகளில் சிறப்பாக கவின் நடித்திருக்கிறார். கவின் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நிராகரித்து நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது அப்போதுதான் புரிந்தது. த்ரில்லர் படமான இதில் டார்க் காமெடி, எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இருக்கும். தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’ படங்களும் வெளியாகிறது. அந்தப் படங்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படமும் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் கவின் பேசுகையில், “ஒருவர் மீது மற்றொருவருக்கு இருந்த நம்பிக்கைதான் இந்தப் படம் உருவாக காரணம். நான் இதுவரை என்னென்ன விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதை எல்லாம் முடிந்த அளவுக்கு இந்தப் படத்தில் கொண்டு வரவேண்டும் என நினைத்தேன்.

எனக்கு சினிமாவில் ஒரு இடத்தைக் கொடுத்தவர் நெல்சன் சார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இது இருக்கும். ஏனெனில், சிவபாலன் இயக்கும் முதல் படம், நெல்சன் சார் தயாரிக்கும் முதல் படம். நமக்கு அமைந்த நல்ல மனிதர்களுக்காக எந்த விஷயமும் செய்யலாம் என்பதுதான் என் நம்பிக்கை.

’ப்ளடி பெக்கர்’ எளிமையான கதைதான். உங்களுக்குப் பிடிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறோம். படத்தில் என்னுடன் நடித்த நடிகர்கள் எல்லோருமே அவ்வளவு எனர்ஜியாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். டெக்னிக்கல் டீமும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘அமரன்’, ‘பிரதர்’ மற்றும் ‘ப்ளடி பெக்கர்’ படங்கள் பார்த்து தீபாவளியை கொண்டாடுங்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE