மெரினா நிகழ்வில் உயிரிழப்பு: அடிப்படை, அத்தியாவசிய தேவைகளில் கவனம் செலுத்துங்க - தவெக விஜய் அறிக்கை!

By KU BUREAU

மெரினாவில் நடைபெற்ற விமான சாகசத்தை காண வந்தவர்களில் சிலர் பலியானதற்கு நடிகர், தவெக தலைவர் விஜய் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார்.

நேற்று மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்ச்சியை நேரில் காண 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குவிந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 5 பேர் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நிர்வாக குறைபாடு, ஏற்பாடுகளை சரிவர செய்யாதது, போதுமான போக்குவரத்து வசதிகளை செய்யாதது என்று கூட்டணி கட்சியினர் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ‘சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE