நடிகர் விஜயின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கியது.
நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாடு இந்த மாத இறுதியில் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை இன்று பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4.30 மணியளவில் விக்கிரவாண்டியில் பந்தக்கால் நடப்பட்டு பூஜை போடப்பட்டது. பூஜைகளை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னின்று நடத்தினார். தமிழகத்தின் முக்கிய கோயில்கள், தேவாலயம், மசூதி ஆகியவற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. நிகழ்வில் ஏராளமான தொண்டர்களும் தவெக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ’பூமி பூஜைக்கு இவ்வளவு கூட்டம் என்றால் மாநாட்டிற்கு எந்த அளவிற்கு கூட்டம் வரும்?’ எனப் பலரும் தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே நான் அரசியல் களத்திற்கு வந்தேன். நாம் ஒன்றாக கூடும்போது உற்சாகமும் கொண்டாட்டமும் இருக்கலாம். அதே சமயம் கட்டுப்பாடாகவும் இருந்தால்தான் பக்குவமாக இருக்க முடியும். இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா? இவர்களால் மாநாடு நடத்திக் காட்ட முடியுமா? என்று பல கேள்விகள் பலரும் கேட்கிறார்கள். நம் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும்போதுதான் அதன் வீரியம் புரியும். மக்கள் இயக்கமாக இருந்த நாம் அரசியல் களத்தில் முன் நிற்பதால் விவேகத்தோடு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். ஒற்றுமையே நம் வலிமை. இந்நிலையில், மாநாட்டிற்கான நாட்களை மனம் சந்தோஷமாக எண்ணத் தொடங்கி விட்டது. வி.சாலை எனும் வெற்றிச்சாலையில் விரைவில் சந்திப்போம்’ எனக் கூறியிருக்கிறார்.