'ஆணவக் கொலைக்கு என்றும் எதிரானவன் நான்...' நடிகர் ஹிப் ஹாப் ஆதி பேச்சு!

By சந்திரசேகர்

"நெல்லை தீபக் ராஜா கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இருப்பினும் ஆணவக் கொலைக்கு நான் எதிரானவன். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆணவ கொலைக்கு எதிராக பாடல் எழுதியுள்ளேன்" என்று, நடிகர் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி தெரிவித்துள்ளார்.

'ஹிப் ஹாப் தமிழா' ஆதி நடிப்பில் பிடி சார் திரைப்படம் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், பிடி சார் திரைப்படம் வெளியாகியுள்ள திருச்சி மாரிஸ் எல்.ஏ திரையரங்கிற்கு 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி ரசிகர்களுடன் திரைப்படத்தை கண்டுகளித்தார். பின்னர், ரசிகர்கள், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். திரையரங்கில் ஹிப் ஹாப் பாடலை ஆதி பாட, ரசிகர்களும் அவருடன் இணைந்து பாட்டு பாடினர்.

பிடி சார் ஆதி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி, "படத்தை வெற்றி அடையச் செய்த அனைவருக்கும் நன்றி. பெண்கள் கூட்டமாக வந்து படத்தை பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மதுரை, தூத்துக்குடி, திருச்சி என அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறோம். அடுத்து, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சென்று திரைப்படம் பார்க்க உள்ளோம். ரசிகர்கள் எங்களை வரவேற்ற விதம் எங்களின் களைப்பை போக்கிவிட்டது. இத்தகைய ரசிகர்கள் எனக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது நான் கொடுத்து வைத்தவன். படத்தை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவதை பற்றி எனக்கு கவலை இல்லை. அது அவர்களின் கருத்து.

பிடி சார் ஆதி

திரையரங்குகளில் இந்த படத்தின் வெற்றியை நீங்களே பார்க்கின்றீர்கள். அப்படி எதுவும் குறை இருந்தால் அதை அடுத்தடுத்த படங்களில் நிவர்த்தி செய்வேன். தொடர்ந்து நல்ல படைப்புகளை தருவேன். என்னை தொடர்ந்து நடிகர், இசையமைப்பாளர், ஹிப் ஹாப் பாடகர் என அனைத்து பரிமாணங்களிலும் பார்க்கலாம். நான் கலைஞனாக சமுதாய கருத்துள்ள படைப்புகளை கொடுக்கவே விருப்பப்படுவேன். நெல்லை தீபக் ராஜா கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இருப்பினும் ஆணவக் கொலைக்கு நான் எதிரானவன். இயக்குநர் பா.ரஞ்சித் என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது. அதனால் அதனைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆணவ கொலைக்கு எதிராக நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஹிப் ஹாப் பாடல் எழுதியுள்ளேன்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE