நடிகர் கவுண்டமணியின் இடத்தை அவரிடமே திரும்ப ஒப்படைக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு நளினி பாய் என்பவருக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்த நிலத்தை நடிகர் கவுண்டமணி விலைக்கு வாங்கினார். அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் அளித்து, 22,700 சதுர அடி பரப்பளவிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாகவும் 3 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டது.
1996ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை நடிகர் கவுண்டமணி, கட்டுமான நிறுவனத்திற்கு செலுத்தி இருந்தார். ஆனால் 2003ம் ஆண்டு வரை கட்டுமான பணிகளைத் தொடங்கவில்லை. எனவே இது தொடர்பாக நடிகர் கவுண்டமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர், 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டு இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையின்படி முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாயை, நடிகர் கவுண்டமணி கட்டுமான நிறுவனத்திற்கு அதிகமாக கொடுத்துள்ளது தெரியவந்தது. எனவே அவரிடமிருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. 2019ம் ஆண்டு அளிக்கப்பட்ட தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, 2021ம் ஆண்டு கட்டுமான நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, கட்டுமான நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!
மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!
டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!
பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!