இளையராஜா காப்புரிமை சர்ச்சை... உடைத்துப் பேசிய வெற்றிமாறன்!

By காமதேனு

இளையராஜாவின் இசை காப்புரிமை தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

படங்களில் தான் இசையமைத்த இசை இசையமைப்பாளருக்கே சொந்தம் என இளையராஜா காப்புரிமை தொடர்பான வழக்கு தொடர்ந்துள்ளார். இது கடந்த சில நாட்களாக இணையவெளியில் பேசுபொருளாகி இருக்கும் நிலையில் பிரபலங்கள் பலரும் இவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனிடம் நேற்று இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இளையராஜா- வெற்றிமாறன்

இயக்குநர் அமீர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் நெல்லையில் நேற்று சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அவரது ‘விடுதலை2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

படத்தின் திரையிடல் முடிந்தபின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது இளையராஜாவின் இசை காப்புரிமை தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நாம் சம்பளத்திற்காகதான் படத்திற்கு வேலைக்குப் போகிறோம். ஆனால், அதை உருவாக்குபவர்களுக்கான உரிமையும் உத்திரவாதமும் தேவை என நினைக்கிறேன்” என்றார்.

அதேபோல, விஜயின் அரசியல் செயல்பாடு குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், களத்தில் இறங்கி செயல்பட்டால் தான் தெரியும் என்றார்.

’விடுதலை’ படம்

சாதிய பாகுபாடுகள் குறித்து கேட்டபோது, “சாதிய பாகுபாடுகள் இல்லை என்று சொல்பவர்கள் இந்தியாவில் எங்கு வசிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. குறிப்பாக, தமிழகத்தில் நிச்சயம் சாதிய பாகுபாடுகள் இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE