ஜிவி பிரகாஷ்- சைந்தவி காதல் தம்பதியர் விவாகரத்து செய்யப்போவதாக நேற்று முதல் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
செல்வராகவன், ஏ.எல்.விஜய், யுவன்சங்கர் ராஜா, தனுஷ் என தனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் விவாகரத்து செய்துள்ள நிலையில், இப்போது ஜி.வி.பிரகாஷூம் விவாகரத்து செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார். இத்தனைக்கும் ஜி.வி.பிரகாஷூம், சைந்தவியும் பள்ளிக் காலத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்குத் திருமணம் ஆகி எட்டு வருடங்கள் கழித்தே அன்வி என்ற மகள் பிறந்தார். குழந்தைக்கு நான்கு வயதாகிறது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பு, இசை என்று பிஸியாக இருப்பதைப் போலவே சைந்தவியும் இசை நிகழ்ச்சிகளிலும், பின்னணி பாடல்களிலும் பிஸியாக வலம் வருகிறார். இந்நிலையில், இவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்று வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இவர்களது விவாகரத்து செய்தி இணையத்தில் காட்டுத்தீப் போல பரவி வந்தாலும், இருவரும் இது குறித்து பதில் சொல்லாமல் மெளனம் காத்து வருகின்றனர். குறிப்பாக, சைந்தவி தனது சமூகவலைதளப் பக்கத்தில் அன்னையர் தினத்திற்காக வாழ்த்துகளும் தனது இசை தொடர்பான விஷயங்களையும் பகிர்ந்து வந்தாரே தவிர இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. இதனால், இந்த செய்தி உண்மைதான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், ’இவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி இதுபோன்று முன்பே வந்தது. அதனால், இதுவும் பொய்யாகதான் இருக்கும். சைந்தவியும் ஜிவியும் தங்கள் புகைப்படங்களை நீக்கவில்லை’ என்றும் இன்னொரு பக்கம் காரணங்கள் சொல்லி ரசிகர்கள் ஆறுதல் படுத்தி வருகின்றனர்.