ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோவிற்கு, பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது. அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டு வருவதோடு, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பொருட்களின் மேம்படுத்தப்பட்ட தொகுதிகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள இலகுவான ஐபேட்-ஐ விளம்பரப்படுத்த ’கிரஷ்’ என்ற பெயரில் விளம்பர வீடியோ ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இந்த விளம்பரத்தில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பல்வேறு பொருட்களையும் ஒன்றாக ஒருங்கிணைத்து மிக மெல்லிசான அளவுகளில் ஐபேடு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை விளக்கும் வகையில் வீடியோ காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
பியானோ, கிடார் உள்ளிட்ட இசைக்கருவிகள், விளையாட்டு இயந்திரங்கள், புத்தகங்கள், வண்ணக் கலவைகள், ஸ்பீக்கர்கள், விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான கலைப் பொருட்கள், பிரம்மாண்ட நசுக்கும் இயந்திரத்தின் அடியில் வைத்து மொத்தமாக அழிக்கப்படுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது கலைத்துறையினரிடையே கடுமையான விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.
குறிப்பாக திரைத் துறையை சார்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டிருந்த இந்த வீடியோவின் பின்னூட்டத்தில், பிரிட்டிஷ் நடிகர் ஹியூக் கிராண்ட் கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார். ’பல ஆண்டுகளாக மனிதர்களின் கற்பனை திறன் மற்றும் அனுபவத்தில் உருவாக்கப்பட்ட கலைகளை, தொழில்நுட்பம் எந்த அளவிற்கு அழிக்கிறது என்பதை இது காட்டுகிறது’ என அவர் விமர்சித்து இருந்தார்.
இதேபோல் பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர் ஆசிப், ’இந்த விளம்பரம் எப்படி நல்ல யோசனை என எனக்கு புரியவில்லை. பல தொழில்நுட்ப நிறுவனங்கள், கலைகளை, கலைஞர்களை, எழுத்தாளர்களை, இயக்குனர்களை பிழிந்து எடுத்து விட்டு, அவர்களுக்கு உரிய ஊதியத்தை தராமல், எல்லாம் எங்களால் தான் உருவானது என்று கூறுவதற்கு சமமானது’ என விமர்சித்துள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு கலைஞர்களும் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’ஆப்பிள் நிறுவனத்தின் புதிய விளம்பரம் மிகவும் சோகமானதாகவும், அறியாமையில் உருவாக்கப்பட்டதாகவும் இருக்கிறது’ என்று அவர் பதிவிட்டுள்ளார். கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விளம்பரத்தை தொலைக்காட்சிகளில் வெளியிடும் முடிவை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!
மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!
இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!
ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!
லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!