காற்றில் கரைந்த கீதம்... பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

By காமதேனு

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 69.

எண்பதுகளில் பிறந்த மற்றும் வாழ்ந்த பெரும்பாலான திரை இசை ரசிகர்களுக்கும், பரிச்சயமான பெயர் பாடகி உமா ரமணன். 'பன்னீர் புஷ்பங்கள்' திரைப்படத்தில் இடம் பெற்ற ’ஆனந்த ராகம் கேட்கும் காலம்’, 'நிழல்கள்' படத்தில் இடம்பெற்ற ’பூங்கதவே தாழ்த்திறவாய்’ உள்ளிட்ட பாடல்களை இன்று கேட்டாலும் மெய் மறந்து நின்று விடுவோர் ஏராளம்.

பாடகி உமா ரமணன்

'பகவதிபுரம் ரயில்வே கேட்' படத்தில் ' செவ்வரளித் தோட்டத்தில உன்ன நெனச்ச' பாடலை இளையராஜாவுடன் இணைந்து பாடியுள்ளார். 'புதுமைப்பெண்' படத்தில் 'கஸ்தூரி மானே கல்யாண தேனே' , 'மெல்லப் பேசுங்கள்' படத்தில் 'செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு', ஸ்ரீதரின் 'தென்றலே என்னைத் தொடு' படத்தில் 'கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்', 'கேளடி கண்ணம்மா' படத்தில் இடம் பெற்ற ‘நீ பாதி நான் பாதி’, 'தூரல் நின்னு போச்சு' திரைப்படத்தில் ‘பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்’ உள்ளிட்ட பாடல்களையும், 'புதுப்பட்டி பொன்னுத்தாயி' படத்தில் ஸ்வர்ணலதாவுடன் இணைந்து ’ஊரடங்கும் சாமத்திலே, நான் உறங்கும் வேளையிலே’ போன்ற ஏராளமான திரைப்பாடல்களை பாடியவர் பாடகி உமாரமணன்.

பாடகி உமா ரமணன் கணவர் ஏ.வி.ரமணனுடன்

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற ஜாம்பவான்களுடன் மட்டுமல்லாமல், அடுத்து வந்த வித்யாசாகர் உள்ளிட்டோர் இசையிலும் உமா ரமணன் பாடியுள்ளார். இறுதியாக அவர் விஜய் நடித்த 'திருப்பாச்சி' திரைப்படத்தில் இடம் பெற்ற ’கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு’ என்ற பாடலை பாடியிருந்தார். திரை இசை பாடல்கள் மட்டுமின்றி, ஏராளமான மேடைக் கச்சேரிகளிலும் அவர் பங்கேற்று வந்தார்.

உமா ரமணன்

அவரது கணவர் ஏ.வி.ரமணன், தொலைக்காட்சிகளில் வர்ணனையாளராகவும், நடிகராகவும், பாடகராகவும் நன்கு அறியப்பட்டவர். சென்னை அடையாறு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உமா ரமணன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். அவரது மறைவிற்கு இசையமைப்பாளர்கள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE