2024ம் ஆண்டுக்கான 'அம்பேத்கர் சுடர் விருது', நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு விருதுகள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்த முறையில் பணியாற்றுபவர்களுக்கு கடந்த 2007ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி, ஞாயிறு ஆகிய விருதுகள் மற்றும் 2022 ஆம் ஆண்டு முதல் மார்க்ஸ் மாமணி விருதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் முன்னாள் முதல்வர் கருணாநிதி, கேரள முதல்வர் பினராயி விஜயன், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பலருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலை விசிக வெளியிட்டுள்ளது. அதில், அம்பேத்கர் சுடர் விருதுக்கு, திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்வாகியுள்ளார். மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருவதால், இந்த விருதுக்கு பிரகாஷ்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார் பிரகாஷ்ராஜ். நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் மக்களிடம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெரியார் ஒளி விருதுக்கு திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காமராசர் கதிர் விருதுக்கு இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருதுக்கு பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருதுக்கு வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில தலைவர் எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருதுக்கு கல்வெட்டியலறிஞர் எ.சுப்பராயலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விருதுகள் வழங்கும் விழா, வரும் மே 25ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!
தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!
தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!
அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!
பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!