அருண் விஜய்க்கு ஜோடியாக ‘தடம்’ படத்தில் அறிமுகமானவர் திருநெல்வேலி தமிழ் மகள் ஸ்மிருதி வெங்கட். அறிமுகப் படம் வெளியான நேரத்தில் கொரோனா ஊரடங்கும் வந்து சேர்ந்ததால் 3 ஆண்டுகள் தேக்க நிலைக்குப் பின், அழுத்தமான கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது வெளியாகி இருக்கும் ‘டபுள் டக்கர்’ படத்தில் ஸ்மிருதி தான் கதாநாயகி. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தவர் காமதேனு டிஜிட்டலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
ஸ்மிருதி வெங்கட் சினிமாவுக்கு வந்த பின்னணி பற்றி ரசிகர்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. அதுபற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...
டிகிரி முடித்ததும் இ காமர்ஸ் நிறுவனம் ஒன்றில் ஸ்டைலிஸ்ட் ஆக பணிபுரிந்தேன். அங்கே பலரும் “நீ மாடலிங் செய்யலாமே” என்றார்கள். அப்படித்தான் நான் பணியாற்றிய நிறுவனத்துக்கே முதலில் விளம்பர மாடல் ஆனேன். பின்னர் மாடல் கோ-ஆர்டினேட்டர் ஜெனிஃபர் அவர்கள் மூலமாக விளம்பர உலகத்துக்கு வந்தேன்.
அவர் தான் என்னை முதன் முதலில் ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் ஆடிசனுக்கு அழைத்துச் சென்றார். அவரது எதிர்பார்ப்பு நிஜமானது. நான் அந்தப் படத்துக்கு தேர்வும் செய்யப்பட்டேன். ஆனால், எதிர்பாராத விதமாக அம்மா அப்பா சினிமாவில் நடிக்க ஒத்துக்கொள்ள வில்லை. அவர்களை மீறிச் செல்ல எனக்கு விருப்பமில்லை. எனக்கு அதில் வருத்தம்தான்.
ஆனால், அம்மாவும் அப்பாவும் எனக்கு உள்ளூர இருந்த வருத்தத்தைத் தெரிந்துகொண்டபின், “நல்ல படங்களில் கெட்டப் பெயர் ஏற்படாத வண்ணம் நடி” என்றார்கள். இதைக் கேள்விப்பட்டதும் ஜெனிஃபர் உதவியுடன் ’தடம்’ படத்துக்குத் தேர்வானேன். கடந்த 5 வருடங்களில் 10 படங்களில் நடித்திருக்கிறேன்.
அப்பா - அம்மா சொன்னதைக் கவனத்தில் வைத்துத்தான் குடும்பக் கதைகளில் அதிகம் நடிக்கிறீர்களா?
எனக்கு அப்படி அமைகிறது நான் என்ன செய்ய... ஒரு மாறுதலாக இப்போது ‘டபுள் டக்கர்’ படம் அமைந்துவிட்டது. குழந்தைகளுக்குப் பிடித்தமான அனிமேஷன் கதாபாத்திரங்கள் ஹீரோவுக்கு உதவி செய்வதுபோன்ற கதை. இதில் நான் ஹீரோவின் லவ் இன்ட்ரஸ்ட் ஆக வந்தாலும் எனக்கு ஆக்ஷன் காட்சிகள் உண்டு. வில்லன்களோடு வேன் ஓட்டிக்கொண்டே சண்டை போடுவது போன்ற காட்சிகளில் நடித்ததைச் சொல்ல வேண்டும்.
இந்தப் படத்தின் மூலம் நான் குழந்தைகளிடமும் பிரபலமாகிவிடுவேன் என்று நம்புகிறேன். குழந்தைகளை சந்தோஷப்படுத்துவது தான் இருப்பதிலேயே சவால் நிறைந்தது. அதில் நாங்கள் டீமாக வெற்றிபெற்றிருக்கிறோம்.
படங்களைத் தேர்வு செய்வதில் உங்களிடம் ஒரு தயக்கம் இருப்பதுபோல் தெரிகிறதே?
தயக்கம் என்று சொல்ல முடியாது. எவ்வளவு சவாலான கதாபாத்திரத்துக்கும் நான் தயார். ஆனால், கமர்ஷியல் படங்களில் வந்து போகும் கதாநாயகி கதாபாத்திரங்களில் எனக்கு விருப்பமில்லை. அப்படி நடித்தால் நீண்ட காலம் சினிமாவில் பயணிக்க முடியாது. நல்ல கதாபாத்திரங்களில் நல்ல நடிப்பைக் கொடுத்தால், “ஸ்மிருதியால் நிச்சயமாக இந்தக் கதாபாத்திரத்தை பண்ண முடியும்; அவரைக் கூப்பிடுங்கள்” என என்னைக் கூப்பிடுவார்கள்.
அப்படித்தான் கடந்த மூன்று படங்களில் என் திறமை மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். அந்தப் படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றிருக்கின்றன.
சொந்தத் திறமையை நம்பும் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்த ஹீரோயின் யார்?
அந்த ஹீரோயின் சினிமாவில் இல்லை; எனது சொந்த வாழ்க்கையில் இருக்கிறார். அவர் என்னுடைய அம்மாவின் அம்மா. எனது பாட்டிக்கு திருமணமாகி எனது அம்மா பிறந்து 1 வயதே ஆகியிருந்த நிலையில் தாத்தா இறந்துவிட்டார். தாத்தா இறந்த பிறகு மனம் தளராமல் பள்ளிப் படிப்பை முடித்து, பிறகு ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைக்குப் போய் மகளை வளர்த்து ஆளாக்கி அவரையும் சொந்தக் காலில் நிற்க வைத்துவிட்டார் பாட்டி.
அம்மாவுக்கு திருமணம் ஆகி நான் பிறந்த பிறகு, அம்மா வேலைக்குச் செல்வதால், என்னை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் விஆர்எஸ் வாங்கிக்கொண்டு என்னை வளர்த்தார். என்னளவில் பாட்டியும் அம்மாவும்தான் எனது ஹீரோயின்கள்.
நல்ல நடிப்பு பற்றி பேசுகிறீர்கள்... நீங்கள் இதுவரை ஜோடி சேர்ந்து நடித்த கதாநாயகர்களில் யாரைப் பார்த்து வியந்திருக்கிறீர்கள்?
தனுஷ். ‘மாறன்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். ஷாட் ரெடியாவதற்கு முன் மிகவும் ஜாலியாக சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார். தானொரு தேசிய விருதுபெற்ற நடிகர் என்கிற அடையாளத்தை அவருடன் பழகும்போது கடுகளவும் உணர முடியாது. அவ்வளவு ஜாலியான மனிதர்.
ஆனால், ‘ஷாட் ரெடி’ என்று சத்தம் வந்துவிட்டால் போதும் அப்படியே சீரியஸ் ஆகிவிடுவார். கேமரா முன்பு நிற்கும்போது அங்கே தனுஷ் காணாமல் போய் ‘மாறன்’ தான் இருப்பார். இந்த ஸ்விட்ச் ஓவரை அவரிடம் கற்றுக்கொண்டேன். அட்டகாசமான அசுரத்தனமான நடிகர். இயக்குநர் எதிர்பார்ப்பதற்கு மேல் ஒரு மில்லி மீட்டர் கூட அதிகமாக நடிக்க மாட்டார். அதையும் நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
பெண் மையப் படங்களுக்குத் தயாராகிவிட்டீர்களா..?
அதற்கான வயது இன்னும் வரவில்லை. இன்னும் நான் சின்னப் பெண் தான். தீபிகா படுகோனேயின் ‘சம்பாக்’ மாதிரியான ஒரு மெச்சூரிட்டியும் அந்த அளவுக்கு ஆளமான கதையும் அமையும்போது அதைப் பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு இன்னும் நிறைய ஆடியன்ஸை நோக்கி நான் நகர விரும்புகிறேன்.
உங்கள் இன்ஸ்டா பக்கத்தில் ‘என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று இப்போது வரை மேசேஜ் செய்வபவர்களுக்கு எந்தப் பதிலும் போடாமல் இருக்கிறீர்கள்... ஒரு சின்ன ஸ்மைலியாவது கொடுக்கலாம் அல்லவா?
அய்யோ... அது தவறாகிவிடும். உண்மையில் ரசிகர்கள் யாரும் இப்படிக் கேட்கமாட்டார்கள். ரசிகர்கள் ரொம்ப ஜெனியூன். இப்படிக் கேட்பவர்கள் இப்படியே தான் கேட்டுகொண்டிருப்பார்கள். அவர்கள் நான் நடித்த படங்களைப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.