அக்வாமேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ’அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அங்கமாக வெளியாக இருக்கிறது.
2018ல் அக்வாமேன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. பாண்டஸி மற்றும் ஆக்ஷனின் அதிரி புதிரி கலவையான இந்த திரைப்படத்துக்கு, சிறுவர் முதல் பெரியவர் வரை பரவலான வரவேற்பு இருந்தது. அதனை நாடிபிடித்த வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம், அக்வாமேன் இரண்டாம் பாகத்துக்கு அடித்தளமிட்டது.
அந்த வகையில் ’அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அடையாளமாக டிசம்பர் 21 அன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் ஆங்கிலம், இந்தி மட்டுமன்றி தமிழ் மற்றும் தெலுங்கிலும் அக்வாமேன் -2 வெளியாக இருக்கிறது.
ஜேம்ஸ் வான் இயக்கியுள்ள ’அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்’ திரைப்படத்தில் ஜேசன் மோமோவா, நிக்கோல் கிட்மேன், பேட்ரிக், வில்சன், ஆம்பர் ஹியர்ட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதையும் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே விரிகிறது.
சுமார் 50 கோடி ஜீவராசி ரகங்கள் சஞ்சரிக்கும் அட்லாண்டிஸ் மன்னராக அக்வாமேன் தனது அடுத்த இன்னிங்ஸை தொடர்கிறார். ஆனால் அதற்கு எதிராக தனது தந்தையின் மரணத்துக்கு பழிவாங்க வேண்டி பிளாக் மந்தா புறப்பாடு அமைகிறது. இம்முறை முன்னைக் காட்டிலும் வலிமையோடு, புராதான சிறப்பு மிக்க கருப்பு திரிசூலத்தி சக்தியை பயன்படுத்துகிறார்கள்.
அக்வாமேனுக்கு உதவ சிறையில் அடைபட்டுள்ள சகோதரர் முன்வருகிறார். அட்லாண்டிஸ் ராஜ்ஜியத்தைக் காப்பாற்றுவதோடு, அக்வாமேன் குடும்பத்தையும் அழிவிலிருந்து காப்பாற்றும் சவால் எழுகிறது. அத்தனையும் கண்களை நிறைக்கும் வழக்கமான பாண்டஸி, ஆக்ஷன் காட்சிகளுடன் இருக்கையில் கட்டிப்போட வருகிறது ’அக்வாமேன் அண்ட் தி லாஸ்ட் கிங்டம்’ திரைப்படம்.
இந்த திரைப்படத்தின் டிரெய்லரை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் தற்போது வெளியிட்டுள்ளது.