திரை விமர்சனம்: ‘தேவரா’

By KU BUREAU

சென்னை: கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்திருக்கும் ’தேவரா’ பான் இந்தியா வெளியீடாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த எதிர்பார்ப்புகளைப் படம் நிறைவேற்றி இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

செங்கடலில் வரும் சரக்கு கப்பல்களில் இருக்கும் சட்ட விரோத ஆயுதங்கள், பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் தேவரா, பைரா, ராயப்பா. இந்த சட்டவிரோத பொருட்கள் தங்கள் இன மக்களையே அழிக்க எதிராக திரும்பியுள்ளது என்ற உண்மையை உணரும்போது இனி அந்த தொழில் செய்யக் கூடாது என முடிவெடுக்கிறார் தேவரா (ஜூனியர் என்டிஆர்). ஆனால், பணத்திற்காக இந்த தொழிலை தொடர முயல்கிறார் பைரா (சயிஃப் அலிகான்). ஆனால், அதைத் தடுக்கும் தேவரா ‘என் பேச்சை மீறி கடத்தலுக்காக யார் செங்கடலுக்கு வந்தாலும் அவர்களை தடுக்கும் பயமாக நான் இருப்பேன்’ என சொல்லி யார் கண்ணிலும் படாமல் கடலுக்குள் மறைகிறார். கடல், மலை என பல வருடங்களாக மறைந்து வாழும் தேவராவை ஊருக்குள் மீண்டும் வர வைத்து, அவரை கொன்று தொழில் தொடர வேண்டும் என சரியான தருணத்திற்காக காத்திருக்கிறார் பைரா. பல வருடங்களாக அரூபமா இருந்த தேவரா வெளியே வந்தாரா? பைராவுடைய நோக்கம் நிறைவேறியதா என்பதுதான் ‘தேவரா பார்ட் 1’ படத்துடைய கதை.

அப்பா, மகன் (தேவரா- வரா) என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜூனியர் என்டிஆர். தோற்றத்தில் இரு கதாபாத்திரங்களுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. தேவரா யாருக்கும் பயப்படாத வீரதீர சூரன். ஆனால், வராவோ பயந்து நடுங்கும் அப்பாவுக்கு நேரெதிரான கதாபாத்திரம். நடிப்பில் இரண்டு கதாபாத்திரங்களையும் சரியாக செய்திருக்கிறார் ஜூனியர் என்டிஆர். அவருக்கான மாஸ் பில்டப் காட்சிகள், சண்டைக் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. பல வருடங்களாக பழிவாங்க வன்மத்தைத் தேக்கி வைத்திருக்கும் வில்லன் கதாபாத்திரம் சயிஃப் அலிகானுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் வீணடிக்கப்பட்ட அல்லது தேவையே இல்லாத கதாநாயகி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர். ஊறுகாய் போல ஒரு பாடலுக்கும் சில கிளாமர் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். மற்றபடி கதையில் துணை கதாபாத்திரங்களாக வரும் பிராகாஷ்ராஜ், முரளிஷர்மா, கலையரசன் ஆகியோர் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

படத்துடைய ப்ளஸ் அதனுடைய தொழில்நுட்பக் குழு. ரத்னவேலுவுடைய ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்தைக் கூட்டுகிறது. கென்னியுடைய ஸ்டண்ட் கோரியோகிராஃபியும் அட்டகாசமாக வந்துள்ளது. அனிருத்துடைய இசை சுமாரான காட்சிகளையும் சூப்பராக்க பயன்பட்டுள்ளது. மற்றபடி, பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. மக்களை காக்க நினைக்கும் மாஸ் ஹீரோ, அதைத் தடுக்க நினைக்கும் வில்லன் கதாபாத்திரம் என இந்த பழிவாங்கும் அதரச பழசான பிளாக் அண்ட் வொயிட் கதையைதான் மறுபடியும் தூசி தட்டி எடுத்து வந்திருக்கிறார் இயக்குநர் கொரட்டலா சிவா. மெதுவாக நகர்கிற முதல் பாதியை காப்பாற்றுவதே ஆக்‌ஷன் காட்சிகள்தான். அடுத்து என்ன நடக்கும் என கணித்து சொல்லக்கூடிய சுமாரான இரண்டாம் பாதி நீண்ட நேரம் இழுவையாக செல்வது மைனஸ். தேவரா கதாபாத்திரம் தவிர மற்ற கதாபாத்திரங்கள் முழுமையாக எழுதப்படவில்லை. பாகுபலி ஸ்டைலில் கிளைமாக்ஸ் அமைத்து இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்திருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் ‘தேவரா’ படம் அக்கட தேசத்தில் இருந்து வந்திருக்கும் மாஸ் ஹீரோவை மையப்படுத்திய மற்றொரு சுமாரான கதை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE