ஜெயம் ரவிக்கு அடுத்த தலைவலி - எதிர்ப்பு தெரிவித்த படுகர் இன மக்கள்!

By ச.ஆனந்த பிரியா

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹெத்தையம்மா’ படப் பாடலுக்கு படுகர் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

’சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் பிரதர் திரைப்படம் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது. ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் ‘ஹெத்தையம்மா’ என்ற குத்துப் பாடலும் இடம்பெற்றுள்ளது. இதற்குதான் நீலகிரியை சேர்ந்த படுகர் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் வசிக்கும் படுகர் இனமக்களின் குலதெய்வம்தான் ஹெத்தையம்மன். வருடம் ஒருமுறை இந்த அம்மனுக்கு விழா எடுத்து கொண்டாடுவார்கள். இதற்காக, 48 நாட்கள் விரதம் இருந்து ஆண்களும் பெண்களும் வெண்ணிற ஆடையில் ஆடல் பாடலுடன் தங்கள் குல தெய்வத்தைப் போற்றி வணங்குவார்கள். மக்கள் நலனுக்காகவே இருக்கும் ஹெத்தையம்மனை வழிபட்டால் தங்கள் உடலில் பலம் பெருகி ஆரோக்கியம் மேம்படும் என்பது படுகர்களின் நம்பிக்கையாக உள்ளது. வருடம் ஒருமுறை நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள படுகர்கள் உலகில் எங்கே இருந்தாலும் வந்துவிடுவார்கள். அவ்வளவு புனிதமாக இந்த நிகழ்வை அவர்கள் போற்றுகிறார்கள்.

இப்படி இருக்கையில், ’பிரதர்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடல் முழு வரலாறு தெரியாமலும், தங்கள் தெய்வத்தின் மீது மரியாதையற்ற பாடலாக இருப்பதாகவும் நீலகிரி மாவட்ட காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளனர். மேலும், இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகளை நீக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE