ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

By காமதேனு

கேரளத்தில் (தமிழ்ப் பதிப்புக்கு கும்பகோணம்), அம்மா, மனைவியுடன் (அமலாபால்) வாழ்ந்து வரும் நஜீப் (பிருத்விராஜ்), வளைகுடா நாட்டுக்கு வேலைக்குச் சென்றால் குடும்ப கஷ்டம் மாறும் என நினைக்கிறான். அதன்படி வீட்டை அடமானம் வைத்து பணம் கொடுத்து வளைகுடா நாடு ஒன்றுக்குச் செல்கிறான். அலுவலக உதவியாளர் பணியை எதிர்பார்த்து செல்லும் அவனும் அவன் நண்பன் ஹக்கிமும் (கே.ஆர்.கோகுல்), தொலைதூர பாலைவனத்தில் இருக்கும் வெவ்வேறு மசராவுக்கு (ஆட்டுப்பட்டி) அழைத்துச் செல்லப்படுகிறார்கள். கொடுமையானச் சூழலில் சிக்கிக்கொள்ளும் இருவரும் அங்கிருந்து தப்பிக்கப் போராடுகிறார்கள். அந்த உயிர்வலி கொடுமையில் இருந்து இருவரும் தப்பித்தார்களா? நஜீபின் குடும்பத்துக்கு என்ன ஆனது? என்பது மீதி கதை.

வாழ்க்கையில் முன்னேற வெளிநாடுகளுக்குச் செல்லும் பலர் போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட கதைகள் ஏராளம். இப்படி சிக்கிக்கொள்பவர்களின் கொடுமையான வேதனையைப் பதிவு செய்யும் உயிர்ப்பு மிக்கப் படைப்பு பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவல். அந்த உயிர்ப்பைச் சிதைக்காமல் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் பிளஸ்ஸி.

படத்தின் பெரும்பகுதி பாலைவனத்தில் தனித்துவிடப்பட்ட நாயகனின் போராட்டம். பெரிய நிகழ்வுகளையோ தடாலடித் திருப்பங்களையோ இதுபோன்ற கதைகளில் எதிர்பார்க்க முடியாது. நாயகனின் துயரத்தைப் பதிவு செய்யும் காட்சிகளே மீண்டும் மீண்டும் வருகின்றன. ஆனாலும் தரமான படமாக்கத்தின் துணையுடன் அலுப்புத்தட்டாமல் நகர்ந்து விடுகிறது முதல் பாதி திரைக்கதை. நாயகனின் பரிதவிப்பை உணர்ந்து முழுமையாக ஒன்ற முடிவதும் நாயகன் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்கிற ஏக்கம் நம்மைத் தொற்றிக்கொள்வதும் இதற்கு முதன்மையான காரணம். இடையிடையே கேரளத்தின் எழில்பொங்கும் சூழலில் அமைக்கப்பட்ட நாயகனின் திருமண வாழ்க்கை, காதல் தொடர்பான காட்சிகள் பாலைவன வெப்பத்தைத் தணிக்கும் மழைச் சாரலாக அமைந்திருக்கின்றன.

ஆடுஜீவிதம்

மசராவிலிருந்து தப்பிச் செல்லும் அவசரத்தில் கூட நாயகன் ஆடுகளுக்கும் ஒட்டகங்களுக்கும் உணவளித்துவிட்டுச் செல்வது போன்ற உணர்வுபூர்வமான தருணங்கள் மனதைத் தொடுகின்றன.

இரண்டாம் பாதியில் நாயகனும் அவன் நண்பனும் அவர்களைப் போலவே சிக்கிக்கொண்ட ஆப்ரிக்கரான இப்ராஹிம் கதிரியின் (ஜிம்மி ஜீன் லூயிஸ்) உதவியுடன் தப்பிச் செல்லும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். உணவும் தண்ணீரும் கிடைக்காமல் நாள்கணக்கில் பாலைவனத்தில் பயணிக்கும் கொடுமையைச் சுற்றியே இரண்டாம் பாதியின் பெரும்பகுதி அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் ஒரே மாதிரியான காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது அலுப்பைத் தருகின்றன. மூன்று மணி நேரம் படத்தை நீட்டிப்பதற்குப் போதுமான அடர்த்தியுடன் காட்சிகள் அமையவில்லை. இதுவும் இரண்டாம் பாதி அலுப்பூட்டுவதற்குக் காரணமாகிவிட்டது.

ஆடுஜீவிதம்

ஆனால் பிளஸ்ஸி தலைமையிலான படக்குழுவின் கடின உழைப்பு பெரும் வியப்பைத் தருகிறது. சின்ன சின்ன விஷயங்களிலும் மிகுந்த கவனம் எடுத்து உழைத்திருப்பது பாராட்டுக்குரியது. பிருத்விராஜின் திரைவாழ்க்கையில் இது மைல் கல். ஒரு எளிய மனிதனின் வெள்ளந்தித்தனத்தையும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஏக்கத்தையும் பாலைவனத்தில் அடைத்து வைக்கப்பட்ட அழுத்தத்தையும் கொடுமைக்கார முதலாளி குறித்த மிரட்சியையும் மனைவி, அம்மாவை காண முடியாத தவிப்பையும் அவ்வளவு கச்சிதமாகக் கண்களாலேயே வெளிப்படுத்தி விடுகிறார். கதாபாத்திரத்துக்காக உடலையும் வருத்தி இருக்கிறார். அவர் மனைவியாக சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அமலா பால் அவ்வளவு அழகு. கோகுல், ஜிம்மி ஜீன் லூயிஸ் ஆகியோரும் சிறந்த நடிப்பைத் தந்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தைத் தாங்கி நிற்கின்றன. பாலைவனத்தின் பரந்து விரிந்த பிரம்மாண்டத்தில் திக்குத் தெரியாமல் அலையும் பரிதவிப்பைப் பார்வையாளர்களுக்கும் கடத்திவிடுகிறது சுனில்.கே.எஸின் ஒளிப்பதிவு. ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு முதல் பாதி திரைக்கதையை ரசனையாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது.

ஒரு தனிமனிதனின் ஜீவமரணப் போராட்டத்தை உயர்தரமான படமாக்கத்துடன் பதிவு செய்திருக்கும் ‘ஆடுஜீவிதம்’, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் மேம்பட்ட படைப்பாக உருமாறியிருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE