'96' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரேம்குமாரின் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது ‘மெய்யழகன்’. கார்த்தி- அரவிந்த்சாமிக்கு இடையே இருக்கும் அன்பை பேசும் கதைதான் ‘மெய்யழகன்’.
எதிர்பாரா சூழ்நிலையில் சொத்துப் பிரச்சினை காரணமாக இரவோடு இரவாக சொந்த ஊரான தஞ்சாவூரை விட்டு வெளியேறுகிறது அருள்மொழியின் (அரவிந்த்சாமி) குடும்பம். 20 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தஞ்சையில் நடைபெற உள்ள சித்தி மகளின் திருமணத்திற்காக சென்னையில் இருந்து மீண்டும் தஞ்சாவூர் வருகிறார் அரவிந்த்சாமி.
தஞ்சாவூரில் அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ளும் உறவுக்காரராக வருகிறார் கார்த்தி (மெய்யழகன்). கூடவே இருந்து விடாமல் பேசிக் கொண்டிருக்கும் அவரை அன்பு தொல்லையாக பார்க்கும் அரவிந்த்சாமி, கார்த்தியின் பெயரைக் கூடத் தெரிந்து கொள்ள விரும்பாமல் அவருடன் பழகுகிறார். தன் மீது கார்த்தி வைத்திருக்கும் எல்லையில்லா அன்பை தெரிந்துக் கொண்டு கலங்குபவர் கார்த்தியின் பெயர் கூட தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்ற குற்றவுணர்வில் அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் இரவோடு இரவாக சென்னைக்கு கிளம்புகிறார். அதன் பின் என்ன ஆனது? கார்த்தி யாரென்று தெரிந்ததா என்பது தான் ‘மெய்யழகன்’ படத்தின் கதை.
கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா எனப் பலர் நடித்திருந்தாலும் கதை முழுக்கவே கார்த்தி - அரவிந்த்சாமியை சுற்றியே நடக்கிறது. டெல்டா இளைஞராக நடிப்பில் அசரடிக்கிறார் கார்த்தி. ‘அத்தான்...அத்தான்’ என அரவிந்த்சாமியை சுற்றி வருவதாகட்டும், வட்டார வழக்கை இயல்பாக பேசுவது, வெள்ளந்தியாக அரவிந்த்சாமியிடம் பழகுவது, ‘நீ யாருன்னே தெரியல’ என அரவிந்த்சாமி சொல்லும்போது தேம்பி அழுவது என தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் கார்த்தி.
அன்பே உருவான அருள்மொழியாக அரவிந்த்சாமி. 20 வருடங்கள் கழித்து ஊருக்கு போலாமா வேண்டாமா என மருகுவது, ஊருக்குள் நுழைந்ததும் பழைய நினைவுகளை மீட்டெடுத்து சந்தோஷப்படுவது, கார்த்தியை யாரென்று தெரியாமல் குற்றவுணர்வில் தத்தளிப்பது என தன் கதாபாத்திரத்தின் ஜீவனை உணர்ந்து திரையில் பிரதிபலித்திருக்கிறார். ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி, ஸ்ரீதிவ்யா என அனைவருமே கதாபாத்திரங்களை உணர்ந்து கச்சிதமாக பொருந்தி போகிறார்கள்.
வன்முறை, ஆபாச வசனங்கள். வலிந்து திணிக்கப்படும் காதல் பாடல்கள் இல்லாதது படத்தின் ஆறுதல். குறிப்பாக கார்த்தியின் கதாபாத்திரம் வெள்ளந்தியாக பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. தன்னுடைய ஜல்லிக்கட்டு காளையை பற்றியும், அரவிந்த்சாமியின் சைக்கிள் பற்றியும் கார்த்தி விவரிக்கும் இடம் சிலிர்ப்பு. கோவிந்த் வசந்தாவின் இசை கதையை உயிர்ப்பிக்கிறது. மகேந்திரன் ஜெயராஜூவின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது. இரண்டு பேர்தான் கதையின் பிரதான கதாபாத்திரம். அவர்களுக்குள்ளான உரையாடல்தான் கதை எனும் போது முடிந்தளவு வசனங்கள் மூலம் அதை நேர்த்தியாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் பிரேம்.
ஸ்டெர்லைட் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினைகள் போன்றவைகளை கதைக்கு தொடர்பே இல்லாமல் நீட்டி முழக்கி இருக்கிறார்கள். இவ்வளவு வருடங்கள் கழித்து தங்கை திருமணம் என்ற ஒரே காரணத்திற்காக வருபவர் ஒரு இரவு கூட தங்காமல் அப்படி அவசரமாக கிளம்ப நினைப்பது ஏன்? அரவிந்த்சாமி குடும்பம் மேல் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் ஊரில் இருக்கும் சொந்தங்கள் ஒருமுறை கூட சென்னை சென்று அரவிந்த்சாமியின் குடும்பத்தினரைப் பார்க்கவில்லையா? என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. ராஜ்கிரண், தேவதர்ஷினி போன்ற நடிகர்களை இன்னுமே கூட பயன்படுத்தி இருக்கலாம் என்ற உணர்வும் வருகிறது. உறவுகளையும் அன்பையும் சொல்ல வந்திருக்கும் ‘மெய்யழகன்’ நீளத்தைக் குறைத்து, சில குறைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.