HBD Rajinikanth| பெயர் தந்த ஏ.வி.எம்.ராஜன்... குற்றவுணர்ச்சிக்குத் தள்ளிய அந்த சம்பவம்!

By காமதேனு

தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்கு ரஜினி இன்றைக்கும் மூன்றெழுத்து மந்திரம். தன் நடிப்பு, வசீகரம், ஸ்டைல் போன்றவற்றால் ரசிகர்களை கட்டி இழுத்தவர். பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் வில்லனாக ஆரம்பித்த இவரது திரைப் பயணம் இப்போது ஹீரோவாக கொடி கட்டிப் பறக்கிறது. இன்று ரஜினி தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த்

பெங்களூருவில் சிவாஜி ராவாக பிறந்த ரஜினிதான் குடும்பத்தில் கடைக்குட்டி. இவருக்கு இரண்டு அண்ணன்கள் ஒரு அக்கா உண்டு. கடைக்குட்டி என்பதால் இயல்பிலேயே பயங்கர சுட்டிக் குழந்தையாக இருந்தார் ரஜினி. இவருக்கு ஒன்பது வயது இருக்கும் போதே இவரது அம்மா காலமானார்.

கிரிக்கெட், ஃபுட்பால், பேஸ்கட் பால் போன்றவற்றில் சிறுவனாக இருந்த போது ஆர்வம் காட்டினார். ஒரு கட்டத்தில் இவரை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் குடும்பம் சேர்த்துவிட, அதுதான் அவரின் ஆன்மிகத்திற்கான முதல் விதையாக அமைந்தது.

நடிகர் ரஜினிகாந்த்

பஸ் கண்டக்ராக வேலை பார்த்தவருக்கு சினிமா ஆர்வம் வர அதற்கான முயற்சி எடுத்தார். இதில் இயக்குநர் கே. பாலச்சந்தர் தான் ரஜினியை நடிகராகக் கண்டெடுத்தார். ஏற்கனவே சிவாஜி கணேசன் என்ற பெயர் திரைத்துறையில் கோலோச்சியதால் அந்தப் புகழில் இவரது பெயர் அடிபட வேண்டாம் என சிவாஜி ராவாக இருந்தவரை ரஜினிகாந்தாக பெயர் மாற்றினார் பாலச்சந்தர்.

அவர் இயக்கிய முந்திய படமான ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் ஏ.வி.எம். ராஜனின் கதாபாத்திரப் பெயர் தான் ரஜினிகாந்த். அந்தப் பெயரைத்தான் சிவாஜி ராவுக்கு வைத்தார் பாலச்சந்தர். அன்றில் இருந்து தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் பாலச்சந்தரிடம் வாழ்த்து பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி. கே.பி. இறந்த சமயத்தில் அவர் தனக்குத் தந்தை போன்றவர் என உணர்ச்சிவசப்பட்டார் ரஜினி.

நடிகர் ரஜினிகாந்த்

சினிமாவில் கதாநாயகனாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவருக்கு ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களே அதிகம் கிடைத்தது. அப்போது கமல் திரைத்துறையில் கதாநாயகனாக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த சமயம். கமலைப் போல சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் அப்போது வெளிப்படுத்தியிருந்தார் ரஜினி.

உள்ளிருந்த ஆசை உந்தித்தள்ள பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் எனத் தனது நடிப்புக்குத் தீனி போட்டும் இயக்குநர்களால் பட்டைத் தீட்டப்பட்டார் ரஜினி. அவரது கறுப்பு நிறம் ரசிகர்களை வசீகரித்தது. இயல்பாகவே அவரிடம் குடி கொண்டிருந்த வேகமும் ஸ்டைலும் அவரை விறுவிறுவென முன்னணிக் கதாநாயகர்களது வரிசைக்குத் தள்ளியது. ’16 வயதினிலே’, ‘பைரவி’, ‘பில்லா’, ‘காளி’ என எண்பதுகளில் கதை நாயகனாக வலம் வந்த ரஜினி பின்பு தொண்ணூறுகளில் கமர்ஷியல் நாயக வட்டத்திற்குள் சிக்கினார். குறிப்பாக, ‘சிவாஜி’ படம் பார்த்துவிட்டு அவரை அறிமுகப்படுத்திய பாலச்சந்தர், ‘நான் ரஜினி என்ற நடிகனை அறிமுகப்படுத்தினேன். அவன் இன்று காணோம்’ என வருத்தப்பட்ட சம்பவமும் உண்டு.

நடிகர் ரஜினிகாந்த்

இடையில் அரசியல் ஆசையும் உந்த ஒருக்கட்டத்தில் அதை உதறினார் ரஜினி. 1980களில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வசனத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார் ரஜினி. எளிய தமிழ் பேசுவதற்கே சிரமப்படும்போது, கலைஞர் தமிழில் பேசுவது கடினம் என்ற தயக்கம்தான் அதற்குக் காரணம். ஆனால், பின்னாளில் அது குறித்து தான் குற்றவுணர்ச்சியில் வருத்தப்பட்டதையும் வெளிப்படையாகப் பகிர்ந்தார்.

‘காலா’, ‘கபாலி’ என ஒரு சில படங்களில் எண்பதுகளின் ரஜினியை அவர் மீட்டாலும் தொடர்ந்து ரஜினி நாயக பிம்பத்திற்கான படங்களையே அவர் தேர்ந்தெடுத்து வருகிறார். எது எப்படியானாலும் ரஜினி எனும் மூன்றெழுத்து வசீகரம் ரசிகர்களுக்கு என்றுமே குறையாத ஒன்று!

பிறந்தநாள் வாழ்த்துகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE