நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள படம், ‘மெய்யழகன்’. பிரேம்குமார் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது.
திருப்பதி கோயிலின் பிரசாதமான லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளர், லட்டு பற்றி கார்த்தியிடம் கேட்டார். அதாவது அவர் நடித்த ‘சிறுத்தை’ படத்தில் இடம்பெற்ற லட்டு காட்சியின் மீம்ஸ் பற்றி கேட்டார். “அது சென்சிட்டிவான விவகாரம். லட்டு பற்றிப் பேச வேண்டாம்” என்றார்கார்த்தி. அவர் சொன்னது பரபரப்பானது.
இதுகுறித்து ஆந்திர துணை முதல்வரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் பேசும்போது, “லட்டை வைத்து நகைச்சுவை செய்கிறார்கள். திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கூட ஒரு நடிகர்அதுபற்றி பேசியுள்ளார். லட்டு சென்சிட்டிவான விஷயம் என்று கூறியுள்ளார். ஒருபோதும் அப்படிக் கூறாதீர்கள். நடிகராக உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மம் என்று வரும்போதுஒரு வார்த்தையைக் கூறும் முன்பு நூறு முறை யோசிக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக, எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பவன் கல்யாண் சார், நான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திருப்பதி வெங்கடேசப் பெருமானின் பக்தன் என்ற முறையில், எப்போதும் நம்மரபுகளை அன்புடன் பின்பற்றுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
» 24 மணி நேரமும் படங்களை திரையிட அனுமதி வேண்டும்: திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை
» மேஷம் முதல் மீனம் வரை - இன்றைய ஒரு வரி ராசிபலன் @ செப்.25, 2024