முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கவிஞர் மேத்தா, பாடகி சுசிலாவுக்கு கலைத் துறை வித்தகர் விருது

By KU BUREAU

சென்னை: ‘கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர்’ விருதுக்கு கவிஞர்மு.மேத்தா, பின்னணி பாடகிபி.சுசிலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் திரையுலகில் சிறந்துவிளங்கும் வாழ்நாள் சாதனை யாளர்களை போற்றி பாராட்டும் வகையில் தமிழக அரசு சார்பில்,முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் ‘கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது’ஆண்டுதோறும் வழங்கப்படும்.விருதாளர்களுக்கு, கருணாநிதிபிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி ரூ.10 லட்சம் ரூபாயும், நினைவு பரிசும்வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் செய்தி துறைஅமைச்சர் மு.பெ.சாமிநாதன்2022-ம் ஆண்டு அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், விருதாளர்களை தேர்வு செய்ய, இயக் குநர் எஸ்பி.முத்துராமன் தலைமையில் நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்டகுழு அமைக்கப்பட்டது. திரைப்பட துறையில் தடம் பதித்து 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஆரூர்தாஸ் எனும் திருவாரூர் தாஸுக்கு கடந்த 2022-ம்ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் 2022 ஜூன் 3-ம் தேதி அவரது இல்லத்துக்கே சென்று விருதை வழங்கினார்.

இந்நிலையில், பெண்மையை போற்றும் விதமாக, ஒரு பெண் திரை கலைஞருக்கும் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 11-ம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் எஸ்பி.முத்துராமன் தலைமையிலான குழு கூடி ஆலோசனை நடத்தி, கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசிலா ஆகிய 2 பேருக்கும் 2023-ம் ஆண்டுக்கான விருதுகளை வழங்க பரிந்துரை செய்துள்ளது. தமிழ் பேராசிரியர், புதுக் கவிதைக்கு ஏற்றம் தந்தவர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர் கவிஞர் மு.மேத்தா. திரை உலகில் பல மொழிகளில் 25,000-க்கும்மேற்பட்ட பாடல்களை பாடியவர், ‘தென்னிந்தியாவின் இசைக்குயில்’, ‘மெல்லிசை அரசி’ என்று பாராட்டப்படுபவர் திரைப்பட பின்னணி பாடகி பி.சுசிலா என்பது குறிப்பிடத்தக்கது.

செப்.30-ல் முதல்வர் வழங்குகிறார்: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வரும் 30-ம் தேதி இந்த விருதுகளை அவர்களுக்கு வழங்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE