“சிலர் மனம் புண்பட்டிருப்பதால்...” - ‘லட்டு பாவங்கள்’ வீடியோ நீக்கம் குறித்து ‘பரிதாபங்கள்’ சேனல் விளக்கம்

By KU BUREAU

சென்னை: சிலர் மனம் புண்பட்டிருப்பதால் அதற்க்கு வருத்தம் தெரிவித்து ’லட்டு பாவங்கள்’ காணொலியை நீக்கி உள்ளதாக ‘பரிதாபங்கள்’ சேனல் விளக்கம் அளித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற நெய் வாங்கியது கண்டறியப்பட்டது. அந்த நெய்யை பரிசோதித்ததில் மாடு, பன்றி கொழுப்புகள், மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் பக்தர்கள் கடும் கண்டனமும், வேதனையும் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த சூழலில் இந்த விவகாரத்தின் அடிப்படையில், ‘லட்டு பாவங்கள்’ என்ற வீடியோவை தங்களுடைய வழக்கமான நகைச்சுவை பாணியில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் வெளியிட்டது. பதிவேற்றம் செய்த சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ பல லட்சம் பார்வைகளை பெற்று வைரலானது. இதனையடுத்து சில மணி நேரங்கள் கழித்து சேனலில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவந்த நிலையில், தற்போது பரிதாபங்கள் யூடியூப் சேனல் வீடியோ நீக்கம் குறித்து தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருப்பதால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொலியை நீக்கி உள்ளோம் இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE