நடிகர் விஜயகாந்துக்கு மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை மீண்டும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உடல்நிலை குறித்து பலவித தகவல்கள் பரவி வருகிறது. இந்தநிலையில், அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா, அவர் நலமுடன் இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும், விஜயகாந்த் உடன் இருக்கும் படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.
விஜயகாந்த் நலமாகவே இருக்கிறார். அவர் குறித்தானத் தவறானத் தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும் செய்தியாளர்கள் பேட்டியின் போது பிரேமலதா வேண்டுகோள் வைத்தார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நலமுடன் கேப்டன் வீடு திரும்புவார் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இந்த நிலையில், மீண்டும் விஜயகாந்துக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றத் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என முன்பு மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.