நடிகர் மதுரை மோகன் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
’முண்டாசுப்பட்டி’, ‘வீரன்’ உள்ளிட்ட ஏராளமானப் படங்களில் நடித்தவர் நடிகர் மோகன். இவரது சொந்த ஊர் மதுரை. இன்று காலை அவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவை நடிகர் காளி வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ‘ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும்.
ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை ’முண்டாசுப்பட்டி’ படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குநர் ரவிக்குமாருக்கும் ‘வீரன்’ பட இயக்குநர் சரவணனுக்கும் மற்றும் ஐயாவுக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
இவரது மறைவுக்கு ரசிகர்கள் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.