விர்ச்சுவல் ஸ்டூடியோ தொடங்கினார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்!

By KU BUREAU

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக் கூடத்தின் (Virtual Production Studio) துவக்க விழா நேற்று நடைபெற்றது.

திரைத்துறையில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து வரும் விர்ச்சுவல் மற்றும் ஏ.ஐ. தொழில் நுட்பத்திற்கான தயாரிப்பு கூடத்தினை கும்மிடிப்பூண்டியில் துவக்கி வைத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான். கும்மிடிப்பூண்டி, ஐயர்கண்டிகை கிராமத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஏ.ஆர்.ஆர்.பிலிம் சிட்டி அமைந்துள்ளது. இங்கு அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தின் (Virtual Production Studio) துவக்க விழா நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் முழுமையான தொழில் நுட்பப் பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக் கூடமான ’uStream’ துவக்க விழா நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த தயாரிப்பு கூடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து அப்போது கலைஞர்கள் எடுத்துரைத்தனர். எல்ஈடி திரை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டுடியோவில், கலைஞர்கள் கணினி காட்சியமைப்புகளுடன் கற்பனை செய்ததை, நேரடியாக அந்த கணத்திலேயே கண் முன் காட்சிப்படுத்த முடிகிறது எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான் ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட தமிழகத்தில் இல்லாத தொழில்நுட்பத்துடன் கூடிய தயாரிப்பு கூடத்தை நிறுவியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

ஆந்திரா, மும்பையில் உள்ள தொழில்நுட்பத்தை சென்னையில் கொண்டு வந்துள்ளதாகவும், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார். புதிய தொழில்நுட்பம் தொடர்பாக பிரத்யேக வல்லுநர்களை கொண்டு விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்தார். பொதுமக்களுக்கு தற்போது திரைப்படங்களின் மீது ஆர்வம் குறைந்து வரும் நிலையில் குறைந்த பொருட்செலவில் பிரம்மாண்ட திரைப்படம் தயாரிக்க இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என தெரிவித்தார். தற்போதே இதனை கண்டு பயந்துவிட கூடாது எனவும் படிப்படியாக அனைவரும் இதனை பயன்படுத்தும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

ரயில் நிலையம், கோவில் போன்ற மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் வெளிப்புற படப்பிடிப்பிற்காக நீண்ட நாட்கள் அனுமதி கிடைக்காத பட்சத்தில் அங்கு ஓரிரு நாள் படப்பிடிப்பு நடத்திய பிறகு இங்கு பிரத்யேக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எஞ்சிய படப்பிடிப்பை முடித்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

இந்த தொழிநுட்பத்தால் வேலை இழப்பு என்பதாக எடுத்து கொள்ள முடியாது எனவும், மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை அவர்களை கொண்டு மட்டுமே செட் அமைத்து பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும், படப்பிடிப்பில் ஒரு பகுதி மட்டுமே இங்கு மேற்கொள்ள முடியும் என்றார். மும்பை, ஆந்திரா செல்வதற்கு பதிலாக இங்கேயே படப்பிடிப்பை நடத்தி கொள்ளலாம் என்றார். பெப்சி அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என வரும் தகவல் குறித்த கேள்விக்கு, இது நல்ல விஷயம் எனவும் எதற்கு அரசியலை கொண்டு வருகிறீர்கள் எனவும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE