பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மாவுக்கு நடிகர் கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: ‘எல்லா நடிகர்களுக்கும் அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம்.
தன் 13-ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம், சினிமா, சீரியல், விளம்பரங்கள் என்று தொடர்ந்தது. 'அம்மா' கவியூர் பொன்னம்மா இயற்கை எய்தினார் என்ற செய்தி வருத்துகிறது. அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவிக்கிறேன். அன்னாருக்கென் அஞ்சலி என்று கமல் தெரிவித்துள்ளார்.
கவியூர் பொன்னம்மா: மலையாள சினிமாவின் மூத்த நடிகையான கவியூர் பொன்னம்மா வெள்ளிக்கிழமை (செப்.20) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 79. 1950-களில் நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். தமிழில் சத்யா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
வயது முதிர்வு காரணமான உடல் உபாதைகளால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவரை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காலமானார். அவர் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த பொன்னம்மாவின் கணவர் மணிசுவாமி ஏற்கெனவே காலமாகிவிட்டார். மகள் பிந்து அமெரிக்காவில் இருக்கிறார்.