சரோஜாதேவி கால்ஷீட்டுக்கு காத்திருந்த எம்.ஜி.ஆர்!

By செ. ஏக்நாத்ராஜ்

'திருடாதே’ படம் எடுக்கும்போது சரோஜாதேவி பிசியாகிவிட்டதால், அவர் கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சின்ன சின்ன வேடங்களில் நடித்து, புரட்சி நடிகராக உயர்ந்தவர் எம்.ஜி.ஆர். அவருடைய ஆரம்ப காலத் திரைப்படங்களில் அதிகம் சரித்திரப் படங்களாகவே அமைந்தன. குதிரையில் பறப்பதும் வாள் சண்டை யில் விளாசுவதும் அவருடைய அடையாளமாகவே அப்போது மாறியிருந்தது. அவர் நடித்த சில சமூக கதைகள் வெற்றி பெறாததால் அதுபோன்ற படங் களில் நடிப்பதை எம்.ஜி.ஆர். தவிர்த்து வந்ததாகச் சொல்வார்கள். அந்த நேரத்தில்தான் அவர் சமூக திரைப்படங்களின் பக்கம் திரும்ப வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தார், எழுத்தாளர் சின்ன அண்ணாமலை. அதற்கான கதையையும் அவரே சொன்னார். அது தேவ் ஆனந்த், கீதா பாலி நடித்த ‘பாக்கெட் மார்’ என்ற இந்திப் படத்தின் கதை.

எம்ஜிஆர் சரோஜா தேவி

முதலில் தயங்கிய எம்.ஜி.ஆர், பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார். சின்ன அண்ணாமலைதான் தயாரிப்பாளர். ப.நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி நாயகி. எம்.என்.நம்பியார், தங்கவேலு, ஏ.கருணாநிதி, வி.நாகையா, குலதெய்வம் ராஜகோபால், சி எஸ் பாண்டியன், சரோஜா, லட்சுமி பிரபா என பலர் நடித்தனர்.

திரைக்கதை, வசனத்தைக் கண்ணதாசனும் மா.லட்சுமணனும் எழுதினர். சுப்பையா நாயுடு இசை அமைத்தார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியம், எம்.கே.ஆத்மநாதன், ரா.பழனிச்சாமி பாடல்களை எழுதினர்.

இந்தப் படத்துக்காக மா.லட்சுமணன், 'திருடாதே', 'நல்லதுக்கு காலமில்லை' என்ற இரண்டு தலைப்புகளைக் கொண்டு வந்தார். இதில், நல்லதுக்கு காலமில்லை என்ற தலைப்பை நிராகரித்த எம்.ஜி.ஆர், இதை என் படத்துக்கு வைத்தால், நானே ‘நல்லதுக்கு காலமில்லை’ என்று சொல்லிவிட்டதாக மக்கள் நினைக்க வாய்ப்பிருக் கிறது என்று கூறிவிட்டு ‘திருடாதே’-வுக்கு டிக் அடித்தார். இந்த தலைப்புக்காக மா.லட்சுமணனுக்கு 500 ரூபாய் பரிசளித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

1957-ல் இதன் படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களிலேயே நாடகத்தில் நடிக்கும் போது எம்ஜிஆருக்கு விபத்தில் கால் முறிந்தது. படப்பிடிப்பு தள்ளிப் போனது. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை, சின்ன அண்ணாமலையால் தாங்க முடியாது என்று நினைத்த எம்.ஜி.ஆர், இதுவரை எடுத்த படத்தை ஏ. எல். எஸ் புரடக்க்ஷன்ஸ் அதிபரும் கண்ணதாசனின் சகோதரருமான சீனிவாசனிடம் கொடுத்துவிடச் சொன்னார். அதுவரை செலவழித்த தொகையை விட அதிகம் கொடுத்து வாங்கிக் கொண்டார், அவர். பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் தொடங்கியது படம். அதற்குள் இதில் நடித்துக்கொண்டிருந்த சரோஜாதேவி, பிசியாகிவிட்டதால் அவர் கால்ஷீட்டுக்காக எம்.ஜி.ஆர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்தப் படத்தில்தான் சண்டைக்காட்சியின் பின்னணியில் ‘டிஷ்யூம்’ இடம்பெற்றது. அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரால் கை, கால்களை அசைக்காமல் நடிக்க முடியாது என்ற விமர்சனம் இருந்தது. அதைப் பொய்யாக்கும் விதமாக எம்.ஜி.ஆர், இந்தப் படத்தில் இரு கைகளையும் பேன்ட் பாக்கெட்டுகள் விட்டவாறே பெரும்பாலான காட்சிகளில் நடித்திருப்பார்.

எம்ஜிஆர் சரோஜாதேவி

இதில் இடம்பெற்ற பட்டுக்கோட்டையின், ‘திருடாதே பாப்பா திருடாதே’ , அந்த காலகட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் ஒலித்த பாடலாக இருந்தது. ‘என்னருகில் நீ இருந்தால்’ பாடலும் சூப்பர் ஹிட்டானது. ஆனால், இந்தப் பாடலுக்கு இசை அமைத்தது விஸ்வநாதன் ராமமூர்த்தி. ஏ.எல்.சீனிவாசன் தயாரித்த வேறொரு படத்துக்காக உருவாக்கப்பட்டப் பாடல் அது. நீளம் கருதி அதில் சேர்க்க முடியாமல் போனதால் சுப்பையா நாயுடுவின் அனுமதியுடன் இந்தப் படத்தில் சேர்த்தனர்.

1961-ம் ஆண்டு இதே தேதியில் (மார்ச் 23) வெளியான ‘திருடாதே’ சரோஜாதேவிக்குத் திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE