முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக வைத்து, கங்கனா ரனாவத் தயாரித்து, இயக்கி,நடித்துள்ள படம் ‘எமர்ஜென்சி’.ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படம் செப்.6-ம் தேதி வெளியாக இருந்தது. இதில் சீக்கியர்களைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகச் சர்ச்சைஎழுந்தது. சீக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தடை விதிக்கக் கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்தப் படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இந்தப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட் சார்பில் , ‘எமர்ஜென்சி’க்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் பி.கொலாப்வாலா, பிர்தோஷ் பூனிவாலா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
ஹரியானா தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்தப் படத்துக்குத் தணிக்கைக் குழு சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பதாகத் தயாரிப்பாளர் தரப்பில் வாதிடப்பட்டது. விசாரித்த நீதிபதிகள், “சென்சார் சான்றிதழை வழங்குவதில் தாமதம் ஏற்படுவது கருத்துச் சுதந்திரம் மற்றும் படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானது.இந்தப் படத்துக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, வரும் 25-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.