” 'வேட்டையன்’ படத்தில், நடிகர் அமிதாப்பச்சன் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர் நடித்திருக்க வேண்டும்” என நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி, இசையமைப்பாளர் அனிருத் என படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஒரு படம் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அடுத்தப் படம் நன்றாக வர வேண்டும் என ஒவ்வொரு படத்திற்கும் டென்ஷன் இருக்கிறது. சில படங்கள்தான் மேஜிக் போல நடக்கும். அதில் ‘ஜெயிலர்’ படமும் ஒன்று. ஞானவேலின் ‘ஜெய்பீம்’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் நாங்கள் இணைந்து வேலை பார்க்கிறோம் எனத் தெரிந்தது,
'உங்கள் கருத்தோடு எனக்கேற்றது போல கமர்ஷியல் படமாக எடுக்க முடியுமா?’ எனக் கேட்டேன். அதற்கு அவர், ‘ரசிகர்களுக்கு உங்களை வேறொரு கண்ணோட்டத்தில் காட்ட வேண்டும்’ என்று சொல்லி இந்தக் கதையை சொன்னார். அமிதாப்பும் கதையைக் கேட்டதும் உடனே ஒத்துக் கொண்டதில் மகிழ்ச்சி. ஒருவேளை, இந்நேரம் சிவாஜி சார் உயிரோடு இருந்திருந்தால் அமிதாப் கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்திருப்போம். அனிருத் இசை இந்தப் படத்திற்கு தேவை என்பதில் தெளிவாக இருந்தேன். ஃபகத் பாசில் கதாபாத்திரம் படத்தில் நன்றாக வந்துள்ளது. அவர் யதார்த்தமான நடிகர். மஞ்சு வாரியர் மிகவும் திறமையானவர். இப்படி எல்லா நடிகர்களும் ஓகே சொன்ன பிறகு திரைக்கதை எழுத இரண்டு மாதங்கள் தேவை என்றார். அடுத்தப் படமான ‘கூலி’ கமிட்மெண்ட் இருந்ததால், லோகேஷிடம் இதைப் பற்றி சொன்னேன். அவரும் அப்போது ‘கூலி’ கதைக்கு இன்னும் நேரம் தேவைப்பட்டதால் சரி என்றார்.
» பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முகபாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படம்!
» 'தளபதி 69’ படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நான்? - பரவசத்தில் ‘பவி டீச்சர்’ பிரிகிடா!
'வேட்டையன்' படத்திற்கான பூஜை போடும் போதே அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸ் செய்யவேண்டும் என முடிவு செய்தோம். லைகாவிற்கு அநேக படங்கள் இருந்ததால், இந்த தேதியை அப்போதே அறிவிக்க முடியவில்லை. சகுனிகள் நிறைய இருக்கிற இந்த சமூகத்துல யோக்கியவானா இருக்கறது ரொம்ப கஷ்டம். சாணக்கியத்தனமும் வேண்டும், சாமர்த்தியமும் வேண்டும். சினிமாவில் நடிக்க வந்து 50 வருடங்கள் ஆகப்போகிறது. ஒன்றும் தெரியாமல் ரயில் ஏறி சென்னை வந்தவன் நான். நீங்கள் கொடுத்த ஆதரவால்தான் இங்கு நிற்கிறேன். ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.